கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரி கட்சிகள் முஸ்லீம் லீக் கட்சிகளும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சியமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சி அப்படியே விஜய் பக்கம் வந்துவிட்டது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவும் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில் விஜய் முதல்வராக ஆட்சியமைத்தார்.
தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்கிற காரணத்துக்காக மட்டுமே தவெக கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற மாட்டோம் என்று முதலிலேயே தெரிவித்துவிட்டு தான் இடதுசாரி கட்சிகள் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை தந்துள்ளது. அவர்கள் இப்போது தங்களது ஆதரவை வாபஸ் பெறும் ஒரு முடிவில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வர் விஜய், எதிர்கட்சியான திமுகவை மட்டுமே வசைபாடி வரும் நிலையில் மத்தியில் ஆளும் கட்சி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விஜய் காட்டிய பணிவும் அடக்கமும் காட்டிய மரியாதையும் அதை உறுதிப்படுத்தியது.
மேலும் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல, மக்கள் நலனுக்கான திட்டங்களில் மத்திய அரசின் உதவிகளை பெறுவதில் பாஜகவுடன் இணைந்து ஆதரவாக செயல்படுவோம் என்று விஜய் சட்டசபையில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் உண்மையில் விஜய் அரசு பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி இப்போது உணரத் துவங்கி விட்டது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் பல செயல்பாடுகளுக்கு விஜய் துணை போகிறார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதுவே திமுக தலைவர் ஸ்டாலினாக இருந்தால் இதுபோல் கூட்டணி தர்மத்தை மீறி இப்படி நடந்துக்கொள்ள மாட்டார். விஜயை முழுசாக நம்பி ஏமாந்து விட்டேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்று புலம்பியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





