தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணி தான் அவரை அறிமுகப்படுத்தினார். பிறகு அவரது இயக்கத்தில் பல படங்களில் நடித்த ரோஜா, அவரையே காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் பெப்சி அமைப்பின் தலைவராக உள்ள இயக்குனர் ஆர்கே செல்வமணி, பல ஆண்டுகளாக திரைப்படம் இயக்கவில்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நான் சம்பாதிக்காமல் இருக்கிறேன். நான் போடுகிற டிரஸ் கார் பெட்ரோல் செலவு உட்பட எல்லாமே என் மனைவி ரோஜா தான் பார்த்துக்கொள்கிறார் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
இப்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ரோஜா, அன்பே டயானா படத்தை தொடர்ந்து லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் ஒன்றில் நடிகை ரோஜா பங்கேற்றார்.
அப்போது ரோஜாவிடம், இயக்குனர் செல்வமணி பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஜா கூறுகையில், அவர் அப்படி பேசியதை கேட்ட போது நான் அழுதுவிட்டேன். இப்போது அதை கேட்டாலும் எனக்கு அழுகை வந்து விடுகிறது. அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது.
என்னோட செல்வா எப்போதுமே ஒரு வெற்றிக்கரமான மனிதர்தான். பெரிய இயக்குனராக தான் அவரை எப்போதும் பார்க்கிறேன். அரசியலிலும் சினிமாவிலும் நான் இருந்தாலும் அவர்கள் குடும்பம் எனக்கு மரியாதையை அன்பை தருவதற்கு காரணம் செல்வா தான். இப்போது செல்வா இறங்கி வருவதை நான் விரும்ப மாட்டேன். அது எனக்கு பிடிக்காது.
எப்போதுமே எனக்கு அவர் மீதான அன்போ மரியாதையோ குறையாது. அவர் அப்படி சொன்னது எனக்கு பெருமை தான் என்றாலும் அவர் அப்படி சொல்லியிருக்க கூடாது என்று கண் கலங்கி அழுதபடி பேசியிருக்கிறார். அதே போல் 15 ஆண்டுகளாக நான் சம்பாதிக்காத போதும் ரோஜா என் மீதுள்ள அன்பு மரியாதை குறையவில்லை என்று இயக்குனர் ஆர்கே செல்வமணியும் கூறியிருப்பது இருவரது அன்பை வெளிப்படுத்துகிறது.





