நடிகர் கருணாஸ் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். அவரது கேரக்டர் எல்லாமே மனதில் நிற்கும் விதமாக இருக்கின்றன. ஆரம்பத்தில் காமெடி நடிப்பில் அவர் ரசிகர்களை கவர்ந்தாலும் இப்போது குணச்சித்திர நடிப்பில் கருணாஸ் ஒரு சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் நடித்த சிவசாமி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கருணாஸ்தான். அந்த அளவுக்க வெற்றிமாறன் நம்பிக்கை வைத்து அவரை நடிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் கதையின் தன்மை கதைக்களம் கேரக்டர் ஆகியவற்றை கவனித்த கருணாஸ், இந்த கேரக்டரில் நான் நடிப்பதை விட பெரிய நடிகர் நடித்தால் இன்னும் வலுவாக படம் இருக்கும் என்று மறுத்திருக்கிறார்.
அதன்பிறகுதான் அந்த கேரக்டரில் கென் கருணாஸின் அப்பாவாக நடிகர் தனுஷ் நடித்திருந்தார். நடிகர் தனுஷ் நடித்த படங்களில் அசுரன் படத்தில் அவர் நடித்த சிவசாமி கேரக்டர் அழுத்தமான ஒரு வரவேற்பை பெற்ற சிறந்த கேரக்டராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கருணாஸ் இன்று பெரிய நடிகராக இருந்தாலும் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டர்தான் அவரை அடையாளப்படுத்தியது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, என்னை காமெடியனாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாலா சார். அவர் பெரிய டைரக்டர். அவர் சங்கீதாவிடம் ஒரு நாள் பேசும்போது, கருணாஸ் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவரை காமெடியனாக தவறுதலாக நான் அறிமுகப்படுத்திவிட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஆனால் எனக்கு அந்த லொடுக்கு பாண்டி கேரக்டரில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். அந்த லொடுக்கு பாண்டி கேரக்டருக்காக மொத்தம் 20 வகையாக அவரிடம் நடந்து காண்பித்தேன். பிறகு படத்தில் வருவதை டைரக்டர் பிக்ஸ் செய்தார். அதேபோல் கண்ணை ஒரு மாதிரி கொட்டை கொட்டையாக விழித்தும் நடித்திருப்பேன்.
அதற்காக திண்டிவனம் சென்று அங்கிருந்த தேவாங்கு விலங்கை பார்த்து அதனுடன் ரெண்டு நாட்கள் டிராவல் செய்து அது மாதிரியே பார்த்து நடித்தேன். எந்த வேலை செய்தாலும் என்னை விட வேறு யாரும் சிறப்பாக செய்யக்கூடாது என்று எனக்குள் நானே போட்டி வைத்துக் கொள்வேன் என்று நடிகர் கருணாஸ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





