தமிழ் சினிமாவில் இப்போது நெல்சன் திலிப்குமார் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்பராஜ் அருண் மாதேஸ்வரன் அட்லி வெற்றிமாறன் மாரி செல்வராஜ் போன்றவர்கள் எப்படி வன்முறை நிறைந்த படங்களை ரசிகர்களுக்கு தருகிறார்களோ அதே போல் 1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஏராளமான படங்கள் வெளியாகின.
குறிப்பாக கதாநாயகி அல்லாத கவர்ச்சி நாயகிகள் இந்த படத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். சில்க் ஸ்மிதா குயிலி அனுராதா ஜெயமாலினி சிஐடி சகுந்தலா என கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே ஒரு நடிகையர் கூட்டம் இருக்கும். அதில் காபரே டான்ஸ் காட்சி கண்டிப்பாக இருக்கும். அரைகுறை ஜிகினா ஆடையில் அப்படி ஒரு ஐட்டம் பாட்டு இல்லாத படமே 1980களில் மிக குறைவுதான்.
இதுகுறித்து ஒருமுறை மக்கள் திலகம் எம்ஜிஆர் பேசியிருக்கிறார். அவர் இதுகுறித்து கூறியதாவது, ’இதயக்கனி படம் வெளிவந்த போது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை. உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று மீண்டும் கேட்டேன்.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் சற்று தயங்கினார். தயவுசெய்து அவர் சொன்னதை அப்படியே சொல் என்றேன். அந்த ரசிகர் மெதுவாக சொன்னார். வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார் என்று சொன்னார். எனக்கு தலையில் இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன்.
அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிந்து வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட பல காட்சிகளை படத்தில் இருந்து நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா?
இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள். உங்களை கை கூப்பி வேண்டிக் கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள். வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம். இப்படிப்பட்ட ஆபாச படங்களை எடுக்காதீர்கள் என்று எம்ஜிஆர் பேசியிருக்கிறார்.





