இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். திரைப்பட இயக்குனர் இசையமைப்பாளர் பாடகர் நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்ட கலைஞர். சமீபத்தில் லெனின் பாண்டியன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இவரது மகன் வெங்கட்பிரபு. இவர் ஆரம்பத்தில் சிவகாசி ஏப்ரல் மாதத்தில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிறகு சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தா படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ் ஆஃப் ஆல்டைம் என்ற படத்தையும் இயக்கினார். அந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அடுத்த படத்தை இயக்காமல் இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ்பிக்சன் படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படம் டிராப் ஆகி விட்டது. பராசக்தி சேயோன் படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் தந்துவிட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது மகன் வெங்கட் பிரபு குறித்து கூறியதாவது, வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தை நம்பி இருந்தான். அதனால தான் அவன் அடுத்த படம் லேட் ஆகுது. அந்த நடிகர் யாருன்னு நான் பெயரைச் சொல்ல மாட்டேன்.
அவரை குறை சொல்ல வேணாம். அவர் வாழட்டும். வெங்கட் பிரபு கதை எல்லாம் ரெடி பண்ணிட்டான். அந்த நடிகரும் கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த நடிகரோட ஒரு படம் ஹிட்டான உடனே அடுத்த இயக்குனரோட ரெண்டு படம் எடுத்துகிட்டு தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்று சொல்லிட்டார்.
அதை வெங்கட் பிரபுவுக்கு அனுப்பி இது உனக்கு தேவையா? எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இதுக்கு மேல அவன் கால்ல விழுந்து நடிக்க வைக்கணுமா? அது நம்ம குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்ன உதாசீனப்படுத்தினால் நீயும் அவனை உதாசீனப்படுத்து. அவன் படத்தை நீ பண்ண கூடாதுன்னு சொன்னேன் என்று இயக்குனர் கங்கை அமரன் அந்த நேர்காணலில் கோபமாக கூறியிருக்கிறார்.





