ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற டைட்டிலில் முதல்முறையாக திரைப்படமாக உருவாகிறது. நாடக மேடையில் தனது கலை பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர் பின்னர் சினிமாவில் கதாநாயகனாக உயர்ந்து தனது நடிப்பாலும் சிறந்த பண்பாலும் மனித நேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
அரசியல் களத்தில் அண்ணாதுரை உடன் இணைந்து பயணித்த அவர் பின்னர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனி கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலில் களம் கண்டார். தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.
சினிமா அரசியல் மக்கள் சேவை என்ற தளங்களில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாழ்க்கை இன்றும் தலைமுறைகளை தாண்டி பேசப்படும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற இந்த திரைப்படம் அவரது வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல் முழுமையான தகவல்களுடன் உருவாக உள்ளது.
எம்ஜிஆருடன் நெருங்கி பழகியவர்கள் அவருடன் பயணித்தவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் அவரது ஆட்சி காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் சக நடிகர் நடிகையர் மற்றும் திரை உலக பிரபலங்கள் ஆகியோரின் நேரடி அனுபவங்களையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை திரைப்பயணம் அரசியல் வளர்ச்சி மக்கள் தொடர்பு மனிதநேயம் மற்றும் முதல்வராக அவர் ஆற்றிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய அக்டோபர் 17ம் தேதி அவர் வாழ்ந்த இராமாவரம் தோட்டம் இல்லத்தில் முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட முக்கிய திரைப்பட குழுவினர் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெ எம் பஷீர் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





