நடிகராக அரசியல் களத்தில் இறங்கிய விஜய் திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் தனது நிலைப்பாட்டை கூறி திமுகவை மட்டுமே விமர்சித்தார். அதுவும் முதல்வரான பிறகு பாஜக குறித்து விஜய் வாயே திறப்பதில்லை என்பதுதான் உண்மை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது விஜய் அவரிடம் காட்டிய பணிவு பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதே வேளையில் திமுக குறித்து சட்டசபை கூட்டங்களிலும் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் கூட விஜய் மிக கடுமையாக பேசி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தொடர்ந்து கிண்டலடித்து பேசுவது விஜயின் வழக்கமாக உள்ளது. திமுகவை நேரடியாக தாக்கி பேசும் விஜய், அதிமுகவை மறைமுகமாக அழித்து விடவும் திட்டமிட்டுள்ளார்.
அதனால் தான் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களை முன்னாள் அமைச்சர்களை முன்னாள் மாவட்ட செயலாளர்களை தவெக பக்கம் தாவச் செய்து அவர்களுக்கு மாநில பொறுப்புகளை தந்து வருகிறார். சமீபத்தில் அதிமுக சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 15 பேருக்கு மாநில தவெக துணை பொதுச் செயலாளர் பதவிகளை விஜய் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய், மற்றும் சிலர் என்று அதிமுக கட்சியை கூறுகிற அதே வேளையில் அந்த கட்சி சார்ந்தவர்களை தனது தவெக கட்சியில் தொடர்ந்து இணைத்து வருகிறார். தற்போது மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் அதிமுக எம்எல்ஏவாக வெற்றி பெற்று பிறகு அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் வந்தவர்கள் தான்.
தொடர்ந்து அதிமுக கூடாரத்தை காலி செய்ய சதிவேலைகளில் ஈடுபட்டு குதிரை பேரம் நடத்தி பெட்டி கொடுத்து அதிமுகவினரை தன்வசப்படுத்துவதாக தவெக தலைவர் விஜயை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். மேலும், பெத்தவங்க மனைவி பிள்ளைகளுடன் வாழாத ஒருவர் எப்படி மற்றவர்கள் மீது பாசம் காட்ட முடியும்? இவர் எப்படி தாய் மாமனாக மக்களுக்கு இருக்க முடியும்? உங்க அண்ணன் உங்க புள்ளே உங்க தம்பி என்று விஜய் பேசும் சினிமா டயலாக் எல்லாம் இனி எடுபடாது என்று தாராபுரம் மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் மிக கடுமையாக பேசியிருந்தார்.
இப்போது தவெக அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட சிலர், விஜய் குடும்பத்தை பற்றி பேசுவது அநாகரிகமாக அரசியல் என்று கூறிய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக, எங்க உங்க அப்பாவை காணோம் என்று விஜய் சட்டசபையில் பேசியபோது இனிச்சது, இப்போ பெத்தவங்க கட்டுன பொண்டாட்டி பெத்த புள்ளைங்க யாருமே கூட இல்லாமல் இருக்கிற விஜயை பத்தி உண்மையை சொன்னா கசக்குதா என்று அதிமுகவினர் விஜயை பந்தாடி வருகின்றனர்.





