கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்த போது தவெக தலைவர் விஜய், பல்வேறு மாவட்டங்களில் தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்துக்கு நேரில் போகவே இல்லை. பல தொகுதிகளில் அவர் வந்தால் நேரில் பார்க்கலாம் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பல தொகுதிகளில் பிரசாரம் என அறிவித்து விட்டு பிறகு அதை விஜய் ரத்து செய்த அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியானது குறிப்பிடத்தக்கது. எனினும் 108 தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அவரது ஆட்சி கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது.
இதுவரை எந்த முதல்வரும் சந்திக்காத வகையில் விஜயும் அவரது தவெக கட்சியும் தொடர்ந்து கடும் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகின்றன. மக்கள் தொடர்ந்து விஜய் குறித்தும் தவெக ஆட்சி நிர்வாகம் குறித்து பல்வேறு புகார்களை குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இணையத்தில் தொடர்ந்து விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பேச பிரசார கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் வந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அவர் கோவையில் இருந்து கருமத்தம்பட்டி பல்லடம் வழியாக வாகனத்தில் தாராபுரம் சென்றடைந்தார்.
கோவையில் இருந்து தாராபுரம் வரை விஜய் வந்த பிரதான வழித்தடங்களில் மெயின் ரோடுகளில் 80 கிலோ மீட்டர் தூரத்தில் பல்வேறு இடங்களில் ரோடுகளுக்கு இருபுறங்களிலும் இரும்பு பேரிகார்டுகள் வைத்து தடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு மக்கள் கூட்டம் தென்படவில்லை. பல இடங்களில் போலீசார் மட்டுமே காவலுக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதனால் ரோட்டோரங்களில் இருந்த கடைகள் வணிக தளங்கள் ஓட்டல்கள் என எதுவுமே நேற்று செயல்பட முடியாத சூழல் உருவானது. ரோட்டுக்கு 2 புறங்களிலும் பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டதால் அங்கு கடைகளை திறக்கவே முடியாத சூழல் உருவாகி பெரும்பாலான இடங்களில் கடையடைப்பு பந்த் போல கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி ஜெயலலிதா ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் வந்த போது கூட இப்படி ஒரு அராஜகம் நடந்தது இல்லை. எங்கள் ஒருநாள் வாழ்வாதாரமே போய்விட்டது என்று வியாபாரிகள் கடைக்காரர்கள் பொதுமக்கள் பலரும் வீடியோவில் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.





