தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு கதாநாயகனாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் சத்யராஜ். புரட்சித் தமிழன் என்று அழைக்கப்பட்ட சத்யராஜ், ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் அவரது கட்டப்பா கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
நடிகர் சத்யராஜ் தொடர்ந்து திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவு திரட்டினார். தவெக கட்சி தலைவர் விஜய் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது, அவசரமாக மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஓட்டு போட்டோம். குழந்தைகள் எல்லாம் குட்டீஸ் நண்பா நண்பீஸ் எல்லாம் சேர்ந்து பெருசுகளை மடக்கி விசிலுக்கு ஓட்டுப் போட வெச்சுட்டாங்க.
என்னுடைய மாமா ஒருவர் அவருக்கு 75 வயசு ஆகுது. இந்த மேடையில் சொல்றேன். அவர் எப்பவுமே இரட்டை இலைக்குதான் ஓட்டு போடுவார். அவர் எப்பவுமே தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நாங்க இரட்டை இலைதான் என்பார்.
ஆனால் இந்த முறை விசிலுக்கு போட்டேன் என்றார். ஏங்க என்று கேட்ட போது என் பொண்ணு வந்து அடம்பிடிச்சு போடச் சொல்லிட்டா என்ன பண்றது? என்றார். அதுக்காக உங்களுக்கு புடிச்ச இரட்டை இலைய விட்டுக் கொடுக்கலாமா என்று கேட்டேன். அடுத்த முறை உங்க பொண்ணே வந்து, உங்களுக்கு பிடிச்ச சின்னத்துக்கு ஓட்டு போடுங்கன்னு அடம்பிடிக்கும் என்று அவர்கிட்ட சொன்னேன்.
ஆட்சியில் இருந்தால் திமுக ஆளும்கட்சி. ஆட்சியில் இல்லாவிட்டால் ஆளும் கட்சியை ஆளுகின்ற கட்சியாக திமுக இருக்கும். யார் ஆளுகிற கட்சியாக இருந்தாலும் திமுக போட்டுக்கொடுத்த பாதையில் தான் ஆட்சி செய்தாக வேண்டும். நாம வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ கொடி பறக்குது என்று கூட சொன்னார்கள். பார்ப்போம் எவ்வளவு நாள் பறக்குது என்று? என்று தனது பாணியில் நடிகர் சத்யராஜ் கிண்டலாக பேசியது வைரலாகி வருகிறது.





