ஒருமுறை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவுக்கு சென்ற போது உண்மையில் நடந்த சம்பவம். எம்ஜிஆர் அமெரிக்கா சென்ற அந்த சமயத்தில் அமெரிக்க வாழ் தமிழர் பழனி பெரியசாமி என்பவர் எம்ஜிஆரின் பயணத் திட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். அவர் அமெரிக்க தமிழ் சங்க தலைவராகவும் அப்போது இருந்திருக்கிறார்.
எம்ஜிஆரிடம் அவர், எந்த எந்த இடங்களுக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று அவர் கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆர் நான் நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் எம்ஜிஆர் பாலிடிமர் என்ற பகுதியில் இருந்து நியூயார்க் வரை ரயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
அந்த நாளில் எம்ஜிஆர் தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் வர சற்று தாமதமாகி விட்டது. அப்போது இந்த டிரெயின் சில நிமிடங்களில் வந்துவிடும். இதை தவற விட்டால் அடுத்த ரயில் வர நீண்ட நேரமாகும் என்று எம்ஜிஆரிடம் பழனி பெரியசாமி கூறி அவசரமாக அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு குழந்தையுடன் ஒரு பெண் வேகமாக எம்ஜிஆரை நோக்கி வந்தார். தன்னை நோக்கி அந்த பெண் வருவதை பார்த்து எம்ஜிஆர் அப்படியே நின்றார். அப்போது அருகில் வந்த அந்த பெண், எம்ஜிஆரை வணங்கினார். பின், நான் உங்களின் மிக தீவிரமான ரசிகை. உங்களை பார்க்க பிரிட்ஜ்மன் என்ற இடத்தில் இருந்து மூன்றரை மணி நேரம் காரை ஓட்டி வந்தேன் என்று கூறினார்.
நீங்கள் ரயிலில் போவதாக தகவல் தெரிந்து வந்தேன். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார். அந்த பெண்ணிடம் அன்பாக பேசி ஆசுவாசப்படுத்திய எம்ஜிஆர், அந்த குழந்தையை தன் கையில் வாங்கி கொஞ்சினார். அந்த பெண்ணின் விருப்பத்தின்படி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்த நேரத்தில் எம்ஜிஆர் செல்ல வேண்டிய ரயில் வந்து சென்று விட்டது.
அப்போது பழனி பெரியசாமி பதட்டமான நிலையில் இருந்தார். பிறகு அந்த பெண்ணை வாழ்த்தி வழியனுப்பி எம்ஜிஆர் வந்தார். ரயில் சென்றுவிட்டது. அந்த பெண்ணிடம் பேசாமல் வந்திருந்தால் அந்த ரயிலை பிடித்திருக்கலாம் என்றார். அப்போது சிரித்தபடி அவரிடம் பேசிய எம்ஜிஆர், ரயில் வரும் போகும். மூன்றரை மணி நேரம் எனக்காக அந்த பெண் காரை ஓட்டிக்கெொண்டு குழந்தையுடன் வந்திருக்கிறார். அவரை நான் பார்க்காமல் போனால் அவர் மனம் மிகவும் கஷ்டப்படும். அவர் சந்தோஷமாக போனதை பார்க்க எனக்கும் சந்தோஷமாக உள்ளது என்று கூறியிருக்கிறார் பொன்மனச் செம்மல்..





