புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டம் அது. கோவையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் திரும்பி எம்ஜிஆர் வந்துக்கொண்டு இருக்கிறார். பின்னால் பல கார்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் எல்லாம் தங்களது காரில் வந்துக்கொண்டு இருக்கின்றனர். மதியம் சாப்பாட்டு வேளை கடந்து விட்டது. எம்ஜிஆர் யார் வீட்டில் சாப்பிட போகிறார் என்று எதிர்பார்ப்பில் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.
உன் வீட்டுக்கு வருவாரா, என் வீட்டுக்கு வருவாரா என அவர்களுக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்கிறது. அப்போது உணவு நேரம் கடந்துக்கொண்டே போகிறது 2 மணிக்கு மேலாகி விட்டது என்று காரில் இருந்த உதவியாளர் எம்ஜிஆருக்கு நினைவுப்படுத்த உடனே எம்ஜிஆர் கோவை குருசாமி நாடார் வீட்டுக்கு காரை விடுங்க என்று உத்தரவிட்டுள்ளார்.
கடைசியில் அதிமுக அல்லாத ஒருவரான குருசாமி நாடார் வீட்டுக்கு எம்ஜிஆர் விருந்து சாப்பிட செல்கிறார் என்று தெரிந்து அங்கிருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் எல்லாம் பலத்த ஏமாற்றமடைந்தனர். அங்கு சென்ற எம்ஜிஆர், அங்கிருந்த ஒரு அம்மாவின் காதை தொட்டு வணங்கி, என்னுடன் வந்துள்ள 20 25 பேருக்கு உணவு பரிமாற முடியுமா என்று கேட்க அவரும் மகிழ்ச்சியாக, நீங்க கேட்டால் 20 ஆயிரம் பேருக்கு உடனே செய்து தர முடியும் என்று கூறியிருக்கிறார்.
கோவை ராயல் இந்து ரெஸ்டாரெண்ட் மூலமாக உணவு வரவழைக்கப்பட்டு அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பிறகு அங்கிருந்து அனைவரும் கிளம்பி விட்டனர். அப்போது காரில் திரும்பிச் செல்லும் போது இத்தனை அதிமுக நிர்வாகிகள் வீடு இருக்கும் போது அங்கு எம்ஜிஆர் சாப்பிட சென்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து எம்ஜிஆரே தனது உதவியாளரிடம் வெளிப்படையாக ஒரு தகவலை அப்போது கூறியிருக்கிறார்.
நான் சாப்பிடப் போனனே, அந்த குருசாமி நாடார், ஒரு காலத்தில் கோவை ராயல் ஸ்டுடியோஸ் வைத்திருந்தார். ரெஸ்டாரெண்ட் ஓட்டலும் வைத்திருந்தார். நான் சினிமாவில் நடிக்காத போது முன்னேற போது இந்த ஓட்டலில் தியாகராஜ பாகவதர் தங்கியிருந்தார். அப்போது அவரை பார்க்க நான் ஆவலாக வந்தேன். 3 4 நாட்கள் ஆகியும் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. பயங்கர கூட்டமாக இருந்தது. 2 நாட்களாக நான் சாப்பிடாமல் பசியில் மயக்கத்தில் இருந்தேன். அப்போது என்னை கவனித்த குருசாமி நாடார், என்னை அழைத்து விசாரிச்சார்.
நான் பசி மயக்கத்தில் இருப்பதை தெரிந்துக்கொண்டு எனக்கு சாப்பாடு கொடுத்தார். தியாகராஜ பாகவதரையும் நேரில் பார்க்க அவரே ஏற்பாடும் செய்து தந்தார். அந்த நன்றிக்காக கோவைக்கு வந்தால், அங்கு சென்று ஒரு டம்பளர் தண்ணீராவது குடித்து விட்டு வருவேன். நான் பொன் பொருள் பணம் எது கொடுத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் அவர்கள் வீட்டுக்கு சென்று அந்த நன்றியை மரியாதையை நான் அவர்களுக்கு கோவை வரும்போது எல்லாம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.





