மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் அதிமுக திமுக தவெக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் ஆளும்கட்சி வேட்பாளர்களாக சத்யபாமா தாராபுரத்திலும் மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும் போட்டியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இப்போது ஒரு வீடியோ செம வைரலாக பரவி வருகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா பேசும் ஒரு வீடியோவில் யாருடனோ அவர் பேசிக்கொண்டு இருக்கிறார். அதை செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பரவ விட்டுள்ளார்.
அதில் பேசும் தவெக வேட்பாளர் சத்யபாமா, கடந்த சட்டசபை பொதுத் தேர்தலின் போது 31 கோடி ரூபாய் செலவு செஞ்சேன். இந்த முறை 14 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். தவெக அமைச்சர்கள், தவெக கட்சிக்காரங்க தங்குவதற்கு மட்டும் ஓட்டல் செலவு 14 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். நானும் ஒரு இமேஜில் இருப்பதால் இதை எல்லாம் மறுக்க முடியலே.
கூட்டணி கட்சிக்காரங்க பிளைட்டில் வர டிக்கெட் எல்லாம் போட்டு கொடுத்தேன். இதுக்கெல்லாம் ஏகப்பட்ட செலவு ஆச்சு என்று அந்த வீடியோவில் சத்யபாமா பேசியிருக்கிறார். அப்போது நைட்டி உடையில் அவர் காணப்படுகிறார். மேலும் அவரது வீடு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள ஷீல்டு போன்றவை அந்த வீடியோவில் அது அவரது வீடுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டுப்போட்ட தவெக வேட்பாளர் சத்யபாமா, அந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட வீடியோ. அதில் பேசியது நான் அல்ல என்று மறுத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த வீடியோ காட்சி என்னுடைய வெற்றியை சிறிதளவும் பாதிக்காது என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த வீடியோவை பார்த்த பொதுமக்களில் பலரும், இது பொய்யான வீடியோ கிடையாது. ஏஐ மூலம் உருவானது அல்ல. உண்மையான வீடியோ தான். அதில் சத்யபாமா தான் பேசுகிறார். அவரது முகம் குரல் தெளிவாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோவில் தவெக கட்சி குறித்தும் சத்யபாமா ஒரு கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.





