- Advertisement -
Homeபொழுதுபோக்குமதிய உணவு நேரம் கடந்தும் விருந்தினர்களை சாப்பிட அழைக்காமல் தாமதித்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் -...

மதிய உணவு நேரம் கடந்தும் விருந்தினர்களை சாப்பிட அழைக்காமல் தாமதித்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் – அதற்கு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் தான் காரணமா?

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் தனது நிர்வாகக் குழுவினரோடு எம்ஜிஆரைப் பார்க்க ஏவிஎம் சரவணன் விரும்பி, எம்ஜிஆருக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்.

அதற்கு ஏவி.எம்.சரவணனிடம், ஒரு நாளைக் குறிப்பிட்டு அனைவரும் அன்று வாருங்கள். என்னோடு மதிய உணவு அருந்தலாம் என்று அழைத்திருக்கிறார் எம்ஜிஆர். அவர் அனுமதி வழங்கியிருந்த அந்த நாளில் அங்கு வந்த அனைவரையும் வரவேற்ற எம்ஜிஆர் அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.

- Advertisement -

மதிய உணவுக்கான நேரம் கடந்து விட்டது. ஆனால் அவர்களை சாப்பிட அழைக்காமல் எம்ஜிஆர் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். அங்கு வந்தவர்களுக்கோ பசி ஒருபுறம் வயிற்றை கிள்ளியிருக்கிறது. ஆனால் எம்ஜிஆரிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம் ஒரு புறம் என்று செய்வது அறியாமல் யோசனையில் இருந்துள்ளனர்.

பின்னர் ஒருவழியாக அனைவரையும் சாப்பிட அழைத்த எம்ஜிஆர், நான் ஏன் இவ்வளவு நேரம் உங்களையெல்லாம் சாப்பிட அழைக்காமல் தாமதப்படுத்தினேன் என்று தெரியுமா? என்று சிரித்தபடி கேட்டிருக்கிறார். அவர்கள் புரியாமல் திருதிரு என விழித்திருக்கின்றனர்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய எம்ஜிஆர், உங்களுக்கெல்லாம் அசைவ உணவு சிறப்பாகத் தயாரிக்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் வந்தவுடன்தான் சரவணன் சைவம் மட்டுமே சாப்பிடுபவர் என்பது எனது நினைவுக்கு வந்தது. உடனே சரவணனுக்குத் தனியாக சைவ உணவு தயாரிக்க சொல்லி விட்டேன். அவருக்கான சைவ உணவு தயாரித்து முடித்ததும் உங்களையெல்லாம் சாப்பிட அழைத்தேன். அதனால்தான் தாமதம் என்று காரணத்தை கூறியிருக்கிறார்.

வந்தவர்களில் ஒரு நபர்தானே சைவம், ஏதாவது அவரைச் சாப்பிடச் சொல்லிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக கருதாமல், அவருக்கும் தனியாக சைவ உணவு சமைக்கச் சொல்லி, அது தயாரானதும்தான் அனைவரையும் விருந்துக்கு அழைத்திருக்கிறார் எம்ஜிஆர். இதுபோன்ற மனித நேய அணுகுமுறைதான், அவரைப் பற்றி இன்றும் மக்கள் பேசும் அளவுக்கு அவரது புகழை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்