தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனங்களை வென்றவர் வைகை புயல் நடிகர் வடிவேலு. என் ராசாவின் மனசிலே படம்தான் அவர் நடித்த முதல் படம். பிறகு பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். குறிப்பாக வி சேகர் இயக்கத்தில் வடிவேலு நடித்த படங்கள் ஆரம்ப காலத்தில் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
குறிப்பாக வரவு எட்டணா செலவு பத்தணா பொங்கலோ பொங்கல் நான் பெத்த மகனே விரலுக்கேத்த வீக்கம் காலம் மாறிப்போச்சு போன்ற வி சேகர் இயக்கிய படங்களில் வடிவேலுவின் காமெடி டயலாக்குகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதே போல் கமலுடன் வடிவேலு இணைந்த நடித்த சிங்காரவேலன் தேவர் மகன் படங்களும் அவருக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் வடிவேலு கூறியதாவது, நான் நடிக்க ஆரம்பித்த அந்த காலகட்டத்தில் எனக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுத்தவர் நடிகர் கமல் சார். கமல் சாரை சாகற வரைக்கும் என்னால் மறக்க முடியாது. தேவர் மகன் என்று ஒரு படம். நானும் அவரும் இன்னொரு படத்தில் சந்திக்கும் போதே அதை பத்தி கமல் சார் சொல்லிட்டார்.
இனிமேல் வடிவேல் என் படத்தில் நடிக்க மாட்டார். கிடைக்க மாட்டார். அவர் படங்களில் ரொம்பவும் பிஸியாகி விடுவார் என்று அவரே சொல்லிட்டார். அவரது வாக்கு எனக்கு பலித்து விட்டது. அவர் ஒரு தீர்க்கதரிசி. அவருக்கு சாமியை பிடிக்குதோ இல்லையோ ஆனா சாமிக்கு அவரை பிடிக்கும்.
அப்படி ஒரு மனிதர். அப்படி ஒரு மகான் என்று கூட சொல்லலாம். நம்ம தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிவாஜி அய்யாவுக்கு அப்புறம் பெரிய ஆளு அவர்தான். அவரோட ஆசிர்வாதம் எல்லாம் எனக்கு கிடைச்சது. ஆனா அப்படியே இப்படி எல்லாம் போயிட்டு போயிட்டு வந்ததுக்கு பின்னால இப்படியே காலத்தை கடத்திட்டோம்.
இங்க நல்லது இருக்கும் கெட்டதும் இருக்கும். அங்கங்க கால் வைக்கிற எடத்துல எல்லாம் கன்னிவெடி வைப்பாங்க என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். நம்ம சொல்லணும்ன்னு இல்லை. அப்படி எல்லாம் வெச்சு வெடி எல்லாம் தாண்டி தப்பிச்சு வந்துட்டோம் என்று நடிகர் வடிவேலு அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





