இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் லஞ்சம் ஊழல் செய்கிறவர்களை கத்தியால் குத்திக் கொல்கிற சேனாதிபதி கேரக்டரில் இந்தியன் தாத்தாவாக நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் கடந்த 2024ம் ஆண்டில் இந்தியன் 2 படம் வெளியானது. இந்த படத்தில் சித்தார்த் எஸ்ஜே சூர்யா பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
கடந்த 2024ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் மிகவும் மோசமாகவும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்த படங்கள் இரண்டே இரண்டுதான். அதில் ஒன்று இந்தியன் 2 மற்றொன்று நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம்தான். இதனால் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
இந்த சூழலில் இந்தியன் 3 படத்தை திரைக்கு கொண்டு வர இயக்குனர் ஷங்கர் படத்தின் நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் யாருமே ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் இவர்கள் 3 பேருக்குமே லைகா நிறுவனம் பேசியபடி சம்பளம் தராமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 மிக மோசமான பிளாப் படமா தந்ததால் நஷ்டமடைந்த தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கியை தராமல் நிறுத்திவிட்டது. ஆனால் இன்று லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இந்தியன் 3 படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்தியன் 3 படம் விரைவில் உருவாகி திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று ஒரு வீடியோவில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், இது கமல்ஹாசன் அனிருத் ஷங்கர் போன்றவர்களுக்கு தெரியாமல் வெளியான அறிவிப்பு. அவர்களுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை எல்லாம் லைகா நிறுவனம் தந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பதால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதன்மூலம் கிடப்பில் போட்ட படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால் இந்தியன் 3 படம் நிச்சயம் திரைக்கு வர வேண்டும். பல நூறு கோடி ரூபாய் அதில் முடங்கியுள்ளது என்று பிஸ்மி அதில் கூறியிருக்கிறார்.





