வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், ஜான் கொக்கென் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே, மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில், அருண் மாதேஸ்வரனின் உழைப்பை கவனித்த தனுஷ், அவருக்கு மீண்டும் ஒரு பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவரின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே, தனது ஐம்பதாவது படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். நடிப்பு, இயக்கம் என இரு பணிகளையும் மேற்கொண்டு வரும் அவர், திரைக்கதையைப் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் ஆகிய இருவரும் தனுஷிற்கு சகோதரர்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்திற்காக மொட்டை கெட்டப்பில் வித்தியாசமாக காட்சியளிக்கிறார் தனுஷ்.
இதில் தனுசுக்கு சகோதரியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சந்திப் ஈசனுக்கு காதலியாக அபர்ணா பால முரளி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 600 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட்ட போடப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக நடிக்க இசையமைப்பாளர் தேவாவை தனுஷ் அணுகியதாகவும், ஆனால் தனக்கு நடிப்பு வராது என்று கூறி இசையமைப்பாளர் விலகியதாகவும் தகவல் வெளியானது.
தனுஷிற்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்று கேள்வி எழுந்த நிலையில், நித்யா மேனன் என்று பதில் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரும் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக மிரட்டி இருந்த அவருக்கு, இதில் முக்கியமான கதாபாத்திரத்தை தனுஷ் கொடுத்திருக்கிறாராம். அநேகமாக அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது. அக்டோபர் மாதம் இறுதியில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





