இந்த 2023-ம் ஆண்டு, கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களுக்கு சிறப்பாக அமைந்த ஆண்டு என்றே சொல்லலாம். தர்பார், அண்ணாத்த பட தோல்விகளால் துவண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கிட்டதட்ட 700 கோடி ரூபாயை அந்த திரைப்படம் அள்ளியிருப்பதால், சிறப்பான கம் பேக்கை கொடுத்த ரஜினி, தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
இதேபோல், சிவகார்த்திகேயனும் மாவீரன் வெற்றி மூலம் மீண்டு வந்துள்ளார். இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. சிவகார்த்திகேயன் மார்க்கெட் சற்று குறையும் அளவுக்கு அந்த படத்தின் ரிசல்ட் இருந்ததால் ஆடிப்போயிருந்த நடிகர், மண்டேலா பட இயக்குநரை பிடித்து சரியான படத்தை கொடுத்து கரை சேர்ந்தார். இந்த பட்டியலில் சந்தானமும் சேர்ந்தார்.
நகைச்சுவை உதறிவிட்டு கதாநாயன் அந்தஸ்தை பெற்றாலும், காமெடியையே தொடர்ந்து செய்து வந்த அவருக்கு, வரிசையாக தோல்வி படங்கள் அமைந்தன. அவர் மீண்டும் நகைச்சுவையிலேயே கவனம் செலுத்தாலும் என்று நாலாக பக்கமும் அறிவுரைகள் வந்து விழ, டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் வெளியாகியது. சந்தானமே எதிர்பார்க்காத ரிசல்ட்டை இந்த திரைப்படம் பெற, நிம்மதி பெருமூச்சு விட்டார் நடிகர்.
இந்த குழுவில் நான்காவதாக வந்து சேர்ந்திருக்கார் விஷால். அவர் நடிப்பில் கடைசியாக ஹிட் ஆன திரைப்படம் இரும்புதிரை மட்டும்தான். அதன்பிறகு, சண்டக்கோழி 2 படத்தில் தொடங்கி, அயோக்யா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என விஷால் நடிப்பில் வெளியான அத்தனை திரைப்படங்களும் வந்த சுவடு தெரியாமலயே மறைந்து போயின. இதனால் கலங்கி போயிருந்த அவர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆன்டனி திரைப்படத்தையே நம்பியிருந்தார்.
விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி என ஏராளமானோர் நடித்திருந்த இந்த திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றி பெற்றது. குறிப்பாக, எஸ்.ஜே.சூர்யா காட்சிக்கு காட்சி அதகளம் செய்திருந்ததால் ரசிகர்கள் விரும்பி பார்க்க, படம் ஹிட் அடித்தது. அன்பானவன், அசராதவன், அடங்காதவன் மற்றும் பகிரா பட தோல்வியால் தெரியாமல் போன இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனும், இந்த படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சிவகார்த்திகேயனின் மாவீரன், தனுஷின் வாத்தி திரைப்பட முதல் நாள் வசூலை மிஞ்சியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல் நாளில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி ரூபாய் மார்க் ஆண்டனி வசூலித்துள்ளது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 12 கோடி ரூபாயை அந்த படம் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஒட்டுமொத்த முதல்நாள் வசூல் பட்டியலில் ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.





