தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகமே தற்போது எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் லியோ. தளபதி விஜயின் 67வது திரைப்படமாக உருவாகியுள்ள லியோவை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணி மாஸ்டர் படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால், லியோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மொத்தம் இரண்டு மணி நேரம் 44 நிமிடங்கள் இந்த திரைப்படம் ஓடுகிறதாம். இதில் இருக்கும் கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டதுடன், 13 இடங்களில் சில காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி எறிந்துள்ளனர். இதற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் நான் ரெடி தான் பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், ஹரால்டு தாஸ் ஆக அர்ஜுனும் வருகின்றனர்.
போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிரைய்லரில் இடம் பெற்ற ஆக்சன் காட்சிகளை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். வரும் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு உடன் பணியாற்றி வருகிறார்.
பக்கா என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில், பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இதற்கான பட பூஜை எளிமையாக நடைபெற்றது.
முதலில் சென்னையில் பாடல் காட்சியை படக்குழு எடுத்தது. ராஜூ சுந்தரம் நடன இயக்குனராக பணி புரிந்த இந்த பாடல் வேலைகள் தற்போது முடிந்துள்ளதாம். யுவன் சங்கர் ராஜா தான் இந்த பாடலை பாடியிருக்கிறாராம். தளபதி விஜயுடன் இணைந்து பிரபுதேவா பிரசாந்த் ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்களாம். படத்தில் முக்கிய வில்லன் மைக் மோகன் தான் என்று கூறப்படுகிறது. லியோ திரைப்படம் வெளியானதும் இதற்கான அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





