உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 படங்களின் தோல்விக்கு பிறகு, உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த படம்தான் விக்ரம். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. லோகேஷ் கனகராஜை அவரது போக்கில் படம் எடுக்கவிட்டு, எதிலும் தலையிடாமல் கமல்ஹாசன் இருந்தே இதற்கு காரணம் என்று சினிமா விமர்சகர்கள் கூறினார்கள்.
படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் மிரட்ட, கிளைமேக்சில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து சூர்யா அசத்தினார். இன்றுவரை, அந்த ரோலுக்கான வெயிட்டேஜ் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், லோகேஷ் கதையமைத்த விதம்தான். அது மட்டுமல்லாமல், இந்த படத்திலேயே எல்.சி.யூ. கான்செப்ட்டும் அறிமுகமாகி அது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
விக்ரம் படத்திற்கு கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்த கமல்ஹாசன், அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவை வைத்து அவர் படம் தயாரித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதன் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றது. மற்றொரு திரைப்படமான சிம்பு நடிக்கும் படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி எடுக்கிறார்.
தயாரிப்பிற்கு மட்டுமில்லாமல் நடிப்பிலும் கமல்ஹாசன் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே அவர் எடுப்பதாக இருந்த தலைவன் இருக்கிறான் படத்தின் கதைதான் என்று கூறப்படுகிறது. இதில் கமலுக்கு மகனாக ஆர்யா அல்லது சித்தார்த் நடிக்கலாம் எனத் தெரிகிறது. இதன்பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. படம் குறித்த அறிவிப்புக்கான டீசர் நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்தநாளன்று வெளியாகிறதாம். இதற்காக இரண்டு நாட்கள் நடந்த சூட்டிங்கில் கமல் பங்கேற்றிருக்கிறார். இதில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நாயகியாக முதலில் த்ரிஷாதான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால்ஷுட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர் நடிக்க முடியாமல் போனது. தற்போது நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதற்காக அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் நடந்தால், தென்னிந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்தை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.





