இந்திய சினிமாத்துறையில் எவ்வளவோ மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் இப்போதும் நடிகைகளை கவர்ச்சிப் பொருளாக காட்டும் ஒரு மனநிலை சினிமாவில் மாறவில்லை. பெண்களுக்கு திரையில் இன்னும் போதிய மரியாதை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாக உள்ளது.
பெண்களின் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் குறைந்து போன இந்த சூழலில் பெரும்பாலான படங்களில் நடிகைகள் வெறும் அலங்கார பொம்மைகளாகவே வந்து செல்கின்றனர். சமீபத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்த பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூர் மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் புகார் எழுந்தது.
படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை அமைத்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் திரைத்துறையில் நிலவும் இந்த மோசமான போக்குக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நித்யா மேனன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நித்யா மேனன் கூறியதாவது, தென்னிந்தியாவில் மட்டும் இந்த அநீதி நடக்கவில்லை. ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே இந்த தப்பான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தயாரிப்பாளர்களுக்கு கலை முக்கியமில்லை. கல்லா கட்டுவது மட்டும்தான் முக்கியம்.
மக்களை எப்படியாவது தியேட்டருக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக ஆபாசத்தை ஒரு தந்திரமாக பயன்படுத்துகிறார்கள். தேவையற்ற ஐட்டம் பாடல்களை படங்களுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இத்தகைய கேவலமான வேலையை செய்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நடிகைகள் தங்களுக்கு என சொந்தமான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தவறான மற்றும் அநாகரீகமான காட்சிகளை தயங்காமல் மறுக்க பழக வேண்டும். தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் துணிந்து குரல் கொடுக்க வேண்டும். கண்ணியமான கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்க நான் விரும்புகிறேன். எல்லை மீறிய கவர்ச்சி மற்றும் ஆபாச காட்சிகளில் நான் எப்போதுமே நடிக்க மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் சமூகப் பொறுப்பு என்று நடிகை நித்யா மேனன் அதில் கூறியிருக்கிறார்.





