தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் படம் வந்தால், ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டமோ, அதை போன்ற கொண்டாட்டம்தான் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இருக்கும். ஏனென்றால், தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் வந்தால்தான், தியேட்டரை நடத்த முடியும். அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் தர முடியும். தியேட்டரை நீண்ட காலம் நல்ல முறையில் நிர்வகிக்க முடியும்.
துவக்கத்தில், சாதாரண சினிமா தியேட்டர்களாக இருந்த பலவும் இன்று டிஜிட்டல் மய தியேட்டர்களாக பல லட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இருக்கின்றன. டிடிஎஸ், டால்பின் சவுண்ட் சிஸ்டங்களுக்கு ஏற்ப ஒளி, ஒலி அமைப்புகள் சேர்க்கப்பட்டு, குஷன் இருக்கைகள், ஏசி, சுகாதாரமான கழிப்பிடங்கள் என, தியேட்டர்கள், சொகுசான அரங்குகளாக மாற்றப்பட்டுள்ளன.
இப்படி தியேட்டர்களை நவீனப்படுத்திய நிலையில் தியேட்டர்களில் நல்ல படங்கள் திரையிட்டு, ரசிகர் கூட்டம் வந்தால் மட்டுமே தியேட்டர்களை நிர்வகிக்க முடியும். இல்லை என்றால், தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிக மோசமாகி விடும். ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்றவர்களின் படங்கள் ரிலீஸ், தியேட்டர்களுக்கு நல்ல லாபத்தை கொடுப்பது வழக்கமாக இருப்பதால், அவர்களது படங்கள் ரிலீஸ், தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கும்.
ஆனால், விஜய் நடித்த லியோ படத்தை பொருத்த வரை, அந்த மகிழ்ச்சியை தியேட்டர் உரிமையாளர்கள் இழந்துவிட்டனர். அதற்கு காரணம், லியோ படத்தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தரப்பில் இருந்து, லியோ திரையிட்ட தியேட்டர்களிடம் இருந்து வசூலில் பங்கு தொகை 75 முதல் 80 சதவீதம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டுள்ளது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, பெரிய நடிகர்கள் படம் வரும்போது, ரசிகர்கள் வருகை தியேட்டர்களில் அதிகரிக்கும். அதனால், தியேட்டர் உரிமையாளர்கள் சந்தோஷப்படுவோம். இந்த முறை லியோ படம், அந்த சந்தோஷத்தை தரவில்லை. வழக்கமாக 50க்கு 50 என்பதுதான் தியேட்டர் உரிமையாளர் – பட விநியோகஸ்தர் இடையிலான டிக்கெட் வசூல் பங்கு தொகையாக இருக்கும். ஆனால், இந்தமுறை 75 முதல் 80 சதவீதம் வரை தியேட்டர் உரிமையாளர்களிடம் புதிய நிபந்தனை போட்டு, தயாரிப்பாளர், விநயோகஸ்தர் தரப்பு வாங்கி விட்டது.
மாஸ்டர் படம் கொரோனா காலத்தில் வந்தபோது 50 சதவீத ரசிகர்களே தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதே நாங்களே, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் பாதிக்க கூடாது என்பதற்காக 75 முதல் 80 சதவீதம் வரை மாஸ்டர் படத்தின் வசூலில் பங்கு தந்தோம். ஆனால், அதற்கு பிறகு விக்ரம், வாரிசு, பீஸ்ட், துணிவு, வலிமை, ஜெயிலர் போன்ற படங்களுக்கு அப்படி வசூலில் பங்கு தரவில்லை. ஆனால், இப்போது தீபாவளி வரை வேறு படங்கள் ரிலீஸ் இல்லை என்ற நிலையில், இந்த சமயத்தை பயன்படுத்தி, எங்களிடம் 75 முதல் 80 சதவீத பங்கு வசூலில் வாங்கி விட்டனர். 190 ரூபாய்க்கு ஒரு டிக்கெட் விற்றால், அரசுக்கான வரி 52 ரூபாய் போக, மீதி 138 ரூபாயில், 75 சதவீதம் பங்கு கொடுத்து விட்டால் எங்களுக்கு கிடைப்பது வெறும் 35 ரூபாய்தான், என்று கூறி இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.





