விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக கடுமையான ட்ரோல்களை சந்தித்தன. இருப்பினும் வசூல் ரீதியாக இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் வரவேற்பை எதிர்பார்த்த விஜய் அந்த இரண்டு படங்களின் ரிசல்ட்டால் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கு மெகா ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கை கோர்த்திருக்கிறார் விஜய். பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களின் தோல்விக்கு இந்தப் படத்தின் மூலம் செமத்தியான பதிலடி கொடுக்க காத்திருக்கிறார். அதற்காக ரொம்பவே தனது நடிப்பில் அவர் மெனக்கெட்டிருப்பதாக லியோ படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.
படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து இருந்த பேட்ச் ஒர்க்கையும் லோகேஷ் கனகராஜ் தனது டீமுடன் காஷ்மீர் சென்று முடித்துவிட்டார். எனவே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. தளபதி 68 படத்தின் ஆரம்பக்கட்ட பணிக்காக விஜய் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். விரைவில் இந்தியா திரும்பி டப்பிங் கொடுக்கவிருக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இதற்கிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், நா ரெடிதான் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார். மொத்தம் 600க்கும் மேற்பட்ட டான்ஸர்கள் விஜய்யோடு ஆடியிருந்தனர். பாடல் பெரும் வரவேற்பை பெற்றாலும் பாடலில் இருந்த வரிகளும், விஜய்யின் வாயில் இருந்த சிகரெட்டும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் கிளப்பியது. எனவே சில மாற்றங்களுடன் இந்தப் பாடல் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த பாடல் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அனிருத்தான் அந்தப் பாடலை பாடவும் செய்திருக்கிறாராம். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கலாம் என ஒரு தகவல் உலாவுவது குறிப்பிடத்தக்கது.





