தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி வைத்த இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். அவர் வந்த பிறகுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் தமிழ் சினிமாவில் சத்தமாகவே கேட்கிறது. குறிப்பாக பலரும் ஒடுக்கப்பட்ட மக்கள், இனம் குறித்த படங்களை எடுக்க முன் வருகின்றனர். இதற்காகவே பா.இரஞ்சித்தை ரசிப்பவர்களும், விமர்சிப்பவர்களும் அதிகம்.
அவரது இயக்கத்தில் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியானது. துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படுதோல்வி என்பதையும் தாண்டி கடுமையான விமர்சனத்தையும் ட்ரோலையும் சந்தித்தன. அதிலும் முகநூல் முற்போக்குவாதிகளுக்காக இந்தப் படத்தை இரஞ்சித் எடுத்திருக்கிறார் என்றும்; துஷாரா ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரமும் ட்ரோல் செய்யப்பட்டன.
சூழல் இப்படி இருக்க அவர் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். முதன்முறையாக விக்ரமுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் என பலர் கூறுகின்றனர்.
கோலார் தங்க வயலில் தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என்பதைத்தான் கதைக்களமாக பா.இரஞ்சித் எடுத்திருக்கிறாராம். கேஜிஎஃப் போன்ற கமர்ஷியல் ரீதியாக கோலார் தங்க வயல் பற்றிய படம் வரும் இதே காலத்தில் அந்த இடத்தில் தமிழர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதை பா.இரஞ்சித் பேசியிருப்பதால் படம் வேறு தரத்தில் இருக்கும் என்கிறார்கள் திரை ஆர்வலர்கள்.
#Thangalaan from 26-1-24 in cinemas worldwide 💥💥💥💥❤️ @Thangalaan @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___ @ActorMuthukumar @preethy_karan @arjun_anbudan @gvprakash @Lovekeegam @kishorkumardop @EditorSelva… pic.twitter.com/Nh0iAKgDyJ
— pa.ranjith (@beemji) October 27, 2023
இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மேக்கிங் வீடியோ விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஷூட்டிங்கும் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி 2024ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி படம் வெளியாகும் என பா.இரஞ்சித் தெரிவித்திருக்கிறார். அதேபோல் படத்தின் டீசர் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வெளியாகிறது.





