நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி வெளியானது. படம் வெளியான ஒரே வாரத்தில் 1000 கோடி ரூபாயை வசூலை கடந்து உலகம் முழுவதும் படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன் மாஸ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ரூ. 2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
புஷ்பா 2 ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள், ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இந்த காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூனும் தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது அவரை காண தியேட்டருக்குள் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தினர்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுடன் இருந்த அவரது குழந்தையும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் பிரமியர் ஷோ திரையிடப்பட்ட தியேட்டர் உரிமையாளர், தியேட்டர் மேனேஜர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் மீது ஐதரபாத் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில், உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்துக்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.
மேலும், தன் மீது போலீசார் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்யும்படியும் கோர்ட்டில் அல்லு அர்ஜூன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில், தியேட்டர் உரிமையாளர், தியேட்டர் மேனேஜரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இன்று நடிகர் அல்லு அர்ஜூனை அவரது வீட்டில் ஐதராபாத் போலீசார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
தனது நண்பர்கள், மனைவி மற்றும் வக்கீல் உள்ளிட்டோருடன் இந்த நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்த ஐதராபாத் போலீசார், தியேட்டரில் பெண் இழந்த வழக்கில் உங்களை கைது செய்கிறோம் என தெரிவித்தனர். இதைக்கேட்டு அங்கிருந்த அல்லு அர்ஜூனின் மனைவி கதறி அழுதார். அவரது கண்ணீரை துடைத்து விட்டு, ஆறுதல் சொன்ன அல்லு அர்ஜூன் போலீசாருடன் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.





