தமிழ் சினிமாவில் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமானவர். அவர் இதுவரை இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, மெர்குரி, பேட்ட ஆகிய படங்கள் பலரையும் கவர்ந்தவை. குறிப்பாக முதல் படமான பீட்சாவில் தைரியமான மேக்கிங், வித்தியாசமான திரைக்கதை என அதகளம் செய்தார் கார்த்திக் சுப்புராஜ்.
அதனையடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படமும் மெகா ஹிட்டானது. அதிலும் மதுரை கேங்ஸ்டர் கதைக்களத்தை புதுமையான விதத்தில் தனது தனித்துவமான மேக்கிங்கில் அழகாக காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதன் மூலம் பாபி சிம்ஹா சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் சுப்ரமணியம் இசையமைத்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மிக முக்கியமாக கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்கும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் லாரன்ஸின் நடிப்பும் அருமையாக இருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் பேய் பட ஹீரோ என்ற இமேஜை லாரன்ஸுக்கு கண்டிப்பாக இந்தப் படம் மாற்றிக்காட்டும் என்றும் உறுதியாக கூறுகின்றனர்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவும் லாரன்ஸும் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய லாரன்ஸ், “ஒரு ஆண்டு உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ரசிகர்களின் ஆராவாரத்தையும் கைத்தட்டல்களையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும், சூர்யாவும் தோன்றும் அனைத்து காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.அதிலும் இடைவேளை காட்சியை நான் ரொம்பவே ரசித்து பார்த்தேன்.
படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜுக்கும், ஸ்டோன் பெஞ்ச் ப்ரொடக்ஷன்ஸுக்கு எனது நன்றி. நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களுக்குமே எனது மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா, “மக்கள் எந்தக் காட்சிகளை எல்லாம் ரசிப்பார்கள் என்று நாங்களும் கார்த்திக் சுப்புராஜும் எதிர்பார்த்தோமா அந்தக் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வரவேற்பை பெற்றிருக்கின்றன. நாங்கள் நினைத்தது நடந்திருக்கிறது. இடைவேளை காட்சியில் கைத்தட்டல்களையும், சந்தோஷத்தையும் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது” என்றார்.





