நடிகர் விஜய் நடிப்பில் நாளை மறுதினம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸாகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களை சேர்த்து வெங்கட்பிரபு உருவாக்கி இருக்கிறார்.
இரட்டை வேடத்தில் அப்பா, மகனாக விஜய், வில்லனாக மைக் மோகன், விஜயின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நாயகிகளாக சினேகா, மீனாட்சி செளத்ரி மற்றும் லைலா, கனிகா, ரம்யாகிருஷ்ணன், வைபவ் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடித்திருப்பது படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் நடித்துள்ளனர். மேலும், படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். திரிஷா மட்ட பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் என்பதெல்லாம் இந்த படத்துக்கு சிறப்பு விஷயங்களாக இருக்கின்றன.
மேலும் படம் துவங்கிய 30 நிமிடங்களுக்குள் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் அறிமுகமாகி விடும் நிலையில், அப்போது முதலே படம் இறுதிகட்டத்தை நோக்கி போக ஆரம்பித்து விடுகிறதாம். அதனால் இரண்டரை மணி நேரம் படம் போவதே தெரியாமல் 3 மணி நேரம் படம் பார்த்த அலுப்பும், சலிப்பும் ரசிகர்களுக்கு வராது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜீத்குமார். அவர்களுக்குள் பொது இடங்களில், நேர்காணல்களில் நண்பர்கள் என அழைத்துக்கொண்டாலும் எம்ஜிஆர் சிவாஜி போல, ரஜினி கமல் போல அஜீத்குமார் விஜய் இடையே போட்டியாளர்கள் என்ற அடையாளம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதனால் அவர்களை எதிரெதிர் துருவங்களாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.
தி கோட் படத்தில் நடித்துள்ள நடிகர் வைபவ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறுகையில், இந்த படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு முக்கிய காட்சியில், நடிகர் விஜய் அஜீத்குமார் பேசிய பிரபலமான வசனம் ஒன்றை பேசி நடித்துள்ளார். அந்த காட்சியும் வசனமும் வரும்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் தியேட்டரே அதிரும் என்பதில் சந்தேகமில்லை, என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் விஜயும், அஜீத்குமாரும் இணைந்த காட்சியாக அது இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





