லியோ படம் துவங்கியதில் இருந்தே பஞ்சாயத்து, பஞ்சாயத்து தான். லியோ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட போது, அதில் சிகரட் பிடித்தபடி விஜய் இருக்கிறார் என்ற ஒரு பஞ்சாயத்து கிளம்பியது. அதற்கு பிறகு, லியோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய 1200 டேன்சர்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற புகார் எழும்பியது.
இதற்கிடையில், லியோ இசை வெளியீட்டு விழா, நடப்பதாக இருந்து அதுவும் நடக்காமல் போனது. 6 ஆயிரம் பேர் கலந்துக் கொள்ள இடவசதி உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்துக்கு, 60 ஆயிரம் பேர் வரும் விதமாக, போலி டிக்கெட் அச்சடித்து விற்றுவிட்டார்கள் என்ற புகார் வந்ததால், உடனடியாக விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து லியோ பட டிரெய்லர் ரிலீஸ் ஆகி அது ஒருபக்கம் பயங்கர அலப்பரையை ஏற்படுத்தியது. விஜய் பேசிய அந்த வசனத்தை கேட்டு பலரும் முகம் சுளித்தனர், பெரும்பாலானவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து, விஜயை திட்டினர். ஒரு கட்டத்தில், அந்த வசனத்துக்கு நானே பொறுப்பு என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சரண்டர் ஆனதால், அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.
இந்த சூழலில், லியோ படத்தின் டிரெய்லரை திரையிட்ட கோயம்பேடு ரோகிணி தியேட்டரை, ரசிகர்கள் சூறையாடியது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் டிரெய்லர் திரையிட்ட தியேட்டர்களுக்கு சென்சார் போர்டு, காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஒரு பரபரப்பு கிளம்பியது.
இதுதவிர, லியோ படத்துக்கு சிறப்பு ரசிகர் காட்சி இல்லை என தமிழக அரசு தரப்பில் அனுமதி ஆரம்பத்தில் மறுக்கப்பட்டது. இப்போது சிறப்பு ரசிகர் காட்சிகள், 6 நாட்கள் நடத்திக்கொள்ள அரசு, அனுமதி வழங்கியுள்ளது. மற்றொரு புதிய பிரச்னையாக, வாரிசு படத்தை விநியோகம் செய்ததில், லியோ தயாரிப்பாளர் லலித்குமாருக்கும், தில்ராஜூக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், தெலுங்கில் லியோ ரிலீஸ் ஆக அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில், பாடகி சின்மயி, லியோ படத்தில் திரிஷாவுக்காக பின்னணி குரல் கொடுத்து டப்பிங் பேசி இருக்கிறார். டப்பிங் யூனிட்டிங் ஏற்கனவே ஏற்பட்ட ஒரு பிரச்னையால், அவரை டப்பிங் யூனிட்டில் இருந்து நீக்கி உள்ளனர். டப்பிங் யூனிட் இருந்து நீக்கப்பட்ட சின்மயி எப்படி லியோ படத்தில் திரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுக்கலாம் என்ற புதிய பஞ்சாயத்து ஒன்று இப்போது கிளம்பி இருக்கிறது. டப்பிங் யூனிட்டில் இல்லாத ஒருவரை எப்படி டப்பிங் பேச வைக்கலாம் என்று பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கிறது.





