பருத்திவீரன் படத்தில் டக்ளஸ் கேரக்டரில் நடித்திருந்தார் கஞ்சா கருப்பு. டீக்கடையில் டீ ஆத்திக்கொண்டு இருக்கும் கஞ்சா கருப்புவை கடை முதலாளி என்று சொல்லி, அந்த வேலையை விட்டே கார்த்தியும், சித்தப்புவாக நடித்த சரவணனும் வெளியேற்றி விடுவர்.
அதே போல், சீட்டாடுவதற்காக கஞ்சா கருப்புவை அழைத்து அவர் மாடு வாங்க வைத்திருக்கும் அனைத்து பணத்தையும் மொத்தமாக கார்த்தி அபகரித்து விடுவார். இதுபோன்ற காட்சிகளில் கஞ்சா கருப்பு நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தொடர்ந்து ராம், தாமிரபரணி, நாடோடிகள், பிரிவோம் சந்திப்போம் போன்ற பல படங்களில் அவரது நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பிரச்னை குறித்து ஒரு நேர்காணலில் கஞ்சா கருப்பு கூறியதாவது, கார்த்தியும் சூர்யாவும் இன்று சினிமா நடிகர்களாக வெற்றி பெற்றதற்கு காரணமே டைரக்டர் பாலாவும், டைரக்டர் அமீரும்தான். மவுனம் பேசியதே, நந்தா படங்கள் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதுபோல் பருத்தி வீரன் படம், கார்த்திக்கு மிகப்பெரிய அடையாளமாக இன்று வரை இருக்கிறது.
அமீர்தான், கார்த்தியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய குரு. அவரை சாமியாக வைத்து வழிபட வேண்டாம். பூஜை அறையில் அவர் போட்டோவை வைத்து கும்பிட வேண்டாம். ஆனால், ஒரு குருவுக்கு உண்டான மரியாதையை கொடுங்கள். ரஜினிகாந்த் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக வளர்ந்த பிறகும், கே. பாலசந்தர் முன் கைகட்டிதான் நின்றார். எம்ஜிஆர், சின்னப்ப தேவர், ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் போன்றவர்களை குருவாக மதித்து நடத்தினார்.
கார்த்தி, இப்போதும் எந்த காலேஜூக்கு போனாலும், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் என்ன மாமா சவுக்கியமா, சித்தப்பு சவுக்கியமா என, பருத்திவீரன் பட டயலாக்கைதான் ரசிகர்களின் மத்தியில் பேசுகிறார். அப்படி ஒரு அடையாளத்தை அவருக்கு கொடுத்த ஒரு இயக்குநருக்கு தர வேண்டிய பணத்தை நியாயமாக அவர் குடும்பம் தந்திருக்க வேண்டும். இன்று பல கோடிகள் கார்த்தி சம்பளம் வாங்க முதல் காரணம் அமீர் என்பதை மறக்கலாமா?
எத்தனை படங்களில் கார்த்தி நடித்தாலும், பருத்திவீரன் என்ற ஒரு படத்துக்கு அது இணையாகாது. கார்த்தி மட்டும் பருத்திவீரன் போல, இப்போது ஒரு படத்தில் நடித்து காட்டட்டும், நான் சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன். ஏனென்றால், பருத்திவீரன் போன்ற ஒரு படத்தை அமீரை தவிர வேறு எந்த இயக்குநராலும் தர முடியாது என, ஒரு காமெடி நடிகராக இருக்கும் கஞ்சா கருப்பு, ஹீரோ கார்த்திக்கு சவால் விட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





