தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டு ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்த ஒரு ஆண்டாக இருந்தாலும் சில நடிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் குபேரா இட்லி கடை தேரே இஸ்க் மெய்ன் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் 3 படங்களுமே வணிக ரீதியாக வெற்றிப் படங்களாக தான் இருந்தன.
மேலும் நடிகர் தனுஷ் இயக்கிய இட்லி கடை அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. ஆனால் அவரது அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ஒரு இயக்குனர் என்ற முறையில் தனுஷூக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தது. இதற்கிடையே தேரே இஸ்க் மெய்ன் இந்தி படம் ரூ. 160 கோடிக்கு மேல் வசூலை குவித்து தனுஷூக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
இனி வருகிற 2026ம் ஆண்டில் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஏற்கனவே கமிட் ஆகி விட்டார். அதில் முதல் படம் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம். 2வது படம் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம், 3வது படம் எச் வினோத் இயக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். வருகிற ஜனவரி இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது.
இன்னும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்காத நிலையில் இந்த படத்தை ரூ. 50 கோடிக்கு ஓடிடி உரிமம் வாங்கிக்கொள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் கமிட் செய்துள்ளது. மேலும் சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைப்பதால் ஆடியோ ரைட்ஸ் ரூ. 12 கோடிக்கு விற்றுள்ளது. மேலும் வெளிநாடுகளில் படத்தை திரையிடும் ஓவர்சீஸ் உரிமம் ரூ. 12 கோடிக்கும் வியாபாரம் நடந்துள்ளது. அதனால் ரூ. 75 கோடிக்கு இப்போதே படம் வியாபாரம் உறுதியாகி விட்டது.
இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் சம்பளம் ரூ. 65 கோடி, கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி சம்பளம் ரூ.7 கோடி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சம்பளம் ரூ. 10 கோடி எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் மலையாள நட்சத்திர நடிகர் மம்முட்டியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். அவரது சம்பளம் ரூ. 15 கோடி எனவும் இதுவரை 100 கோடி ரூபாயை நடிகர்களின் சம்பளமே தொட்டு விட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





