நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக மட்டுமே தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். அமர்க்களம் படத்தில் அவரை, காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடலுக்கு திரையில் நடனமாட வைத்தவர் இயக்குநர் சரண். ரசிகளுக்கு அந்த பாடலும், நடனமும் மிகவும் பிடித்துப்போக ராகவா லாரன்ஸை தேடி வாய்ப்புகள் வர ஆம்பித்தன.
அடுத்து பார்த்தேன் ரசித்தேன் படத்தில் ஆண்டி ஹீரோ கேரக்டர் செய்தார் ராகவா லாரன்ஸ். அந்த நடிப்பும் ரசிகர்களிடம் அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சில படங்களில் பாடல்களுக்கு நடனமாடிய அவர் அற்புதம் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
ஆனால் முனி படம், லாரன்ஸ் சினிமா பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. வேதிகா, ராஜ்கிரண், காதல் தண்டபாணி, வினுசக்ரவர்த்தி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் காஞ்சனா படங்களுக்கு முன்னோடியாக சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. நாசர், சரண்யா, சிநேகா, ஸ்ரீமன், இளவரசு உள்ளிட்டோர் நடித்த பாண்டி படமும் ராகவா லாரன்ஸ்க்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதையடுத்து படங்களில் தீவிரமாக நடிக்கத் துவங்கிய ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் பேய் படங்களாக, திகில் கதைகளாக இருந்தன. மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற மாஸ் காட்டிய படங்களிலும் லாரன்ஸ் நடித்து ரசிகர்களிடம் பேச வைத்தார். அதே வேளையில், நிறைய பேருக்கு கோடிக்கணக்கில் உதவிகள் செய்தும், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். சில படங்களை ராகவா லாரன்ஸ் தயாரிக்கவும், இயக்கவும் செய்தார்.
எனினும் சில ஆண்டுகளாக ராகவா லாரன்ஸ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் அவர் நடித்த சந்திரமுகி 2 மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் உடனடி வெற்றிக்காக காத்திருந்த ராகவா லாரன்ஸ்க்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து, உற்சாகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நடிப்பதை சற்று விலக்கி வைத்து விட்டு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். படத்தை இயக்கி, அவரே ஹீரோவாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில் நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கதை டிஸ்கஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் மீண்டும் பேய் படம் எடுக்க போகிறாரா அல்லது வித்யாசமான கதை களத்தில் நடிக்கப் போகிறாரா எனத் தெரியவில்லை. இப்போதைக்கு டைரக்சன்தான் என்பதே அவரது அதிரடி முடிவாக இருக்கிறது.





