இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைப்பது, இசை கச்சேரி நடத்துவது என படுபிஸியாக இருக்கிறார். வெளிநாடு, உள்நாடு என பறந்து பறந்து தனது இசை கச்சேரியை நடத்திவருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் கச்சேரியை நடத்தாமல் தவிர்த்தே வந்தார். இதுகுறித்து அவரிடம் பல முறை நெட்டிசன்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
சூழல் இப்படி இருக்க சினிமாவில் தான் நுழைந்து 30 நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சென்னை பனையூரில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் கான்செர்ட் நடத்த திட்டமிட்டிருந்தார். அந்த கான்செர்ட் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் கனமழை பெய்ததால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. செப்டம்பர் 10ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு ஏசிடிசி ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் வாங்கிய டிக்கெட்டுகள் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு செல்லும் என கூறப்பட்டிருந்தது. அதனால் ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் ஆர்வத்துடன் நேற்று நிகழ்ச்சிக்கு சென்றனர்.அதேசமயம் புதிய டிக்கெட்டுகளும் விற்கப்பட்டன.
இதன் காரணமாக கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. பலர் அந்த மைதானத்துக்குள் செல்ல முடியாமல் சாலையில் காத்திருந்தனர். அதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் கூட்டத்துக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் டிக்கெட்டுகளை கிழித்து போட்டனர். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
இந்த சம்பவத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்து பதிவு செய்திருந்த ட்வீட்டில், “ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி. கட்டுக்கடங்காத கூட்டத்தால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சக்சஸ் ஆகியிருக்கிறது. நெரிசல் காரணமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தது.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என குறிப்பிட்டிருக்கிறார்.





