நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக, லியோ ரிலீஸ் ஆன 12 நாட்களில் ரூ. 540 கோடியை வசூலித்து சாதனை புரிந்ததால், உடனடியாக இந்த வெற்றி விழா நேற்று நடத்தப்பட்டது. இசை வெளியீட்டு விழா நடக்காததால், ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த விழா நடத்தப்பட்டது.
லியோ படத்துக்கு ஏற்பட்ட பல பிரச்னைகள், இசை வெளியீட்டு விழா நடக்காமல் போனது, சிறப்பு காட்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது, பின்னர் அனுமதி வழங்கிய பின்பும், அதிகாலை காட்சிக்கு அரசு மறுப்பு தெரிவித்தது என பல காரணங்கள் இருந்ததால், இந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்பது, ரசிகர்களிடையே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், ரஜினி ரசிகர்கள், விஜய் ரசிகர்களிடையே எழுந்த மோதல் போக்கும், யாருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதில் அவர்களுக்குள் சமூக வலைதளங்களில் நீடித்த வாக்குவாதமும் முற்றிய நிலையில், இதுகுறித்தும் விஜய் கருத்து தெரிவிப்பார் எனவும் ஆவலாக கவனிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, விஜய் நேற்று விழாவில் பேசினார். சமூகவலைதளங்களில் இவ்வளவு கோபம், ரசிகர்களுக்கு வேண்டாம். யார் மனதையும் நாம் புண்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட விஜய், சூப்பர் ஸ்டார் பட்டம் அவர் ஒருவருக்கு தான். நான் ரசிகர்களின் தளபதியாக மட்டுமே இருந்து விடுகிறேன், என சூப்பர் ஸ்டார் விவகாரத்துக்கு புல் ஸ்டாப் வைத்தார்.
தல என்றால் அவர் மட்டும்தான் என அஜீத்குமாரை குறிப்பிட்டு, அவரையும் தன் நண்பர் என்பதையும், புரட்சிக்கலைஞர் கேப்டன் என்றால் அவர் ஒருவர்தான் என விஜயகாந்தையும் புகழ்ந்துவிட்டார். அதுமட்டுமின்றி, நமக்கு நிறைய வேலை இருக்கு என்ற வார்த்தையை ரசிகர்களிடம் சொன்னதன் மூலம், அரசியல் பணிகள் காத்திருக்கிறது என்பதையும் மறைமுகமாக உணர்த்தி விட்டார்.
அதுமட்டுமின்றி, 2026ம் ஆண்டு என்ற கேள்விக்கு, கால் பந்தாட்டம் நடக்கிறது. கப்பு முக்கியம் பிகிலு என, தன் பட வசனத்தை பேசி, சட்டசபையில் வெற்றி முக்கியம் என்பதையும் கோடிட்டு காட்டி விட்டார். குட்டிக்கதை மூலம், முயலை அடிப்பதை விட யானையை வெல்வதே முக்கியம் என்று கூறி, சினிமாவில் பட்டமும், புகழும் பெறுவதை விட, அரசியலில் வெற்றியை அடைவதே முக்கியம் என்பதையும் தனது பேச்சின் வாயிலாக தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.





