இந்திய சினிமாவில் இப்போது பான் இந்தியா படங்கள் என்பது டிரண்டிங் ஆகி விட்டன. எந்த பெரிய நடிகர்கள் நடித்தாலும், 300 கோடி ரூபாய் 500 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பது, அதை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து வெர்சன்களில் விட்டு ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொடுவதுதான் இலக்காக இருக்கிறது.
ஜெயிலர், விக்ரம், கைதி, லியோ, ஜவான், பதான், மார்க் ஆண்டனி, கேஜிஎப், பாகுபலி, ஆர்ஆர்ஆர், இந்தியன் 2, இந்தியன் 3, விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கோட் என இனி பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் எல்லாமே இப்படி பான் இந்தியா என்ற வார்த்தையை நோக்கியே ஓடிக்கொண்டு இருக்கின்றன.
தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரிய படங்கள் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதைவிட மிக முக்கியத்துவம் வாய்ந்தது சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் கருத்துள்ள நல்ல படங்கள். ஜெயிலர் 500 கோடி ரூபாய், லியோ 600 கோடி ரூபாய் என வசூலை குவித்தாலும், நடப்பாண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்கள் மணிகண்டன் நடித்த குட்நைட், அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர்த்தொழில் ஆகிய 2 படங்களும்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி ரசித்த படங்களாக இருக்கின்றன.
பெரிய நடிகர்கள் நாங்கள் கமர்ஷியல் ஹீரோக்கள் என மார்தட்டிக் கொள்கின்றனர். லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் நாங்கள்தான் மாஸ் டைரக்டர்கள் என்று மீசையை முறுக்கி வீட்டுக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் எடுப்பது எல்லாமே ஹாலிவுட் படங்களில் இருந்து உருவப்பட்ட ஈயடிச்சான் காப்பி படங்கள்தான்.
இப்போது திரைக்கு வந்துள்ள சலார் படமும் அப்படிப்பட்ட பான் இந்தியா படங்களில் ஒன்றாக தான் இருக்கிறது. கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் படம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு, இந்த படத்துக்கு ஏன் வந்தோம் என யோசித்து அளவுக்கு ஒரு சொதப்பலான படத்தை தந்திருக்கிறார் அவர். இந்த படத்தை விட சமீபத்தில் வந்த லோ பட்ஜெட் படம் ஒன்றுக்கு நேற்று கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதாவது ஞாயிறு தினமான நேற்று சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில், மால் தியேட்டர்களில் சலார் படம் திரையிட 4 காட்சிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர் கூட்டமே இல்லாததால் காட்சிகள் 3, 2 என குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் விதார்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஆயிரம் பொற்காசுகள் என்ற சின்ன பட்ஜெட் படத்தின் காட்சிகள் பல தியேட்டர்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஹியூமர் படத்துக்கு ரசிகர் கூட்டம் பலமாக இருந்துள்ளது. ரசிகர்களிடம் நல்ல கதைதான் பேசும், வெறும் பில்டப் பேசாது என இனியாவது இயக்குநர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.





