விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமாக உருவாகும் காவியத்தை, ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு கமல்ஹாசன்தான் கதை எழுதி இருக்கிறாராம்.
அவர் ஏற்கனவே எடுக்க இருந்த தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் கதை தான் இது என்று கூறப்படுகிறது. இதற்கு திரைக்கதை எழுதும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் வினோத். ராணுவ பின்னணி கொண்ட க்ரைம் திரில்லராக இந்த திரைப்படம் உருவாக இருக்கிறதாம்.
இதில் கமலுக்கு மகனாக நடிக்க வைக்க முதலில் விஷாலை அணுகி இருக்கிறார்கள். அவர் மறுத்துவிட்டதால் ஆர்யா மற்றும் சித்தார்த்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கு தக் லைப் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் திரிஷா ஜெயம் ரவி துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நேற்று இதற்கான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். கேங்ஸ்டர் கதைக்களமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாம்.
இந்த நிலையில் தனது 69 ஆவது பிறந்த நாளை உலகநாயகன் கமல்ஹாசன் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார். அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகத்தை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக நேற்று நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து வைத்தார் கமல்ஹாசன். சைவம் அசைவம் என அடித்து தூள் கிளப்பிய அந்த விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இன்று திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அவர் பார்ட்டி வைத்தார். இதில் நடிகர் சூர்யா, பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தி திரையுலகை சேர்ந்த அமீர் கானும் பங்கேற்றார். தனது தாயின் உடல்நிலை சிகிச்சைக்காக சென்னை வந்திருக்கும் அவர், கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று விருந்தில் பங்கேற்றார். பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த பார்ட்டி குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.





