நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களும் 2025ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால் இதில் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் மட்டுமே வெற்றியை பெற்றது. இது அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்திய படமாகவும் அமைந்தது.
இந்நிலையில் ஏகே 64 படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே வழங்கிய அஜீத்குமார் கடந்தாண்டு முழுவதும் பல வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸில் ஆர்வமாக கலந்துக்கொண்டார். அதனால் ஏகே 64 படப்பிடிப்பு கடந்தாண்டு முழுவதும் தொடங்கப்படவில்லை.
இந்த 2026ம் ஆண்டு துவங்கிய 3 மாதங்கள் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இன்னும் ஏகே 64 படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலாக வேதாளம் விஸ்வாசம் விவேகம் வீரம் என அஜீத் நடித்த படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குவார் என்ற ஒரு தகவலும் கசிந்துள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏகே 64 படத்தை இயக்கப் போவது நான்தான் என்று அதற்கான பணிகளில் ஸ்டோரி டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த தகவலால் நொந்து போயுள்ளார். அத்துடன் இன்னும் ஒரு முக்கிய தகவலும் வெளியாகி அவரை அப்செட் செய்திருக்கிறது.
அதாவது இந்த மார்ச் மாதம் துவங்கி 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்து நடக்கும் கார் ரேஸ்களில் பங்கேற்க நடிகர் அஜீத்குமார் தயாராகி வருகிறார். அதனால் ஏகே 64 படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டிலும் துவங்கப்படுவதற்கான வாய்ப்பு 100 சதவீதம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா இருவரில் யாரை அஜீத்குமார் ஓகே செய்தாலும் அடுத்த ஆண்டு வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
இந்த சூழ்நிலையில் பிலிம் சேம்பரில் நடிகர் அஜீத்குமார் அஜீத்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்து அதற்காக 2.56 லட்சம் ரூபாய் வரை கட்டணமும் செலுத்தி உறுப்பினராகி இருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு ஆறுதலாக அஜீத்குமாரின் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட ஆவணப்படம் மட்டுமே இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது. கார் ரேஸ் தயாரிப்பு என அஜீத்குமாரின் கவனம் திசை மாறியதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.





