தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகராவது, நடிகர்கள் இயக்குநராவது வழக்கமாக நடக்கிற ஒன்றுதான். பாரதிராஜா, மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன் என பலர் இயக்குநர்களாக இருந்து, நடிகர்கள் ஆனவர்கள்தான். கமல், ஒரு இயக்குநர்தான். சத்யராஜ் வில்லாதி வில்லன் என்ற படத்தை இயக்கியவர் குறிப்பிடத்தக்கது. வெங்கட்பிரபு ஒரு நடிகர்தான்.
சில நடிகர்களுக்கு நடிப்பது ஒரு கட்டத்துக்கு பிறகு போரடித்து போய் இயக்குநராக மாறி விடுகின்றனர். இதற்கு மேலாக, தன்னுடைய இயக்கத்தில் நல்ல நடிகர்களை நடிக்க வைப்பது, நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மக்களுக்கு தருவது என்ற உயர்ந்த நோக்கமும் அதில் ஒளிந்திருக்கிறது. ஏனெனில், ஒரு நடிகராக இயக்குநருக்கு கட்டுப்பட வேண்டும். நடிகர் இயக்குநராகும் போது, தன் கருத்து சுதந்திரத்தை படங்களாக மாற்றி ரசிகர்களுக்கு தரலாம்.
அதுபோல், இப்போது தமிழில் பிரபலமான நடிகரான அரவிந்த் சாமி இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். துவக்கத்தில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமான அரவிந்த் சாமி, பல வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர்.
குறிப்பாக பம்பாய், தனி ஒருவன், போகன், தலைவி, செக்கச் சிவந்த வானம், பாஸ்கர் ஒரு ராஸ்கல், தளபதி, கடல், இந்திரா, என் சுவாசக்காற்றே, தேவராகம், தாலாட்டு, மறுபடியும், இருவர், புதையல், சாசனம் என பல படங்களில் மிக சிறந்த நடிப்பை தந்திருந்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லன் ரோல்களில் நடித்தார் அரவிந்த் சாமி. குறிப்பாக தனி ஒருவன், போகன் படங்களில் ரசிகர்களை மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், சமீபமாக அரவிந்த் சாமி படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். விஜய் 68 படத்தில் கூட, வில்லன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அரவிந்த் சாமிதான். ஆனால், அவர் பிறகு மறுப்பு தெரிவித்த நிலையில், அரவிந்த் சாமி நடிக்க வேண்டிய வில்லன் கேரக்டரில்தான் இப்போது மைக் மோகன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரவிந்த் சாமி படங்களில் நடிப்பதை மறுப்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. அதாவது, அரவிந்த்சாமி டைரக்டர் ஆக முடிவு செய்து இருக்கிறார். அதற்கான கதை, திரைக்கதையை ரெடி செய்துவிட்டார். தமிழில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஹீரோ, தமிழ் சினிமா ரசிகர்கைள வில்லனாக வந்து மிரட்டிக்கொண்டு இருக்கும் பகத் பாசில்தான் ஹீரோ. அவரிடமும் கதை குறித்து, அரவிந்த் சாமி பேசி சம்மதம் பெற்றுவிட்டதாக தெரிகிறது. விரைவில், படப்பிடிப்பு தளத்தில் அரவிந்த் சாமியை, இயக்குநராக ரசிகர்கள் பார்க்கலாம்.





