சினிமாத்துறையில் நன்றி மறப்பதும் வெற்றியாளர்களை துதிபாடும் கூட்டம் அவர்களே பிளாப் படங்களை தரும்போது உதாசீனப்படுத்துவதும் காலம் காலமாக நடந்து வருகிறது. எப்போதுமே வெற்றியின் பக்கமே நிற்கும் கலைஞர்கள், தோல்வியடையும் நட்சத்திர நடிகர்களை இயக்குனர்களை மிக விரைவில் புறக்கணித்து விடுகின்றனர்.
ஆனால் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் செய்துள்ள ஒரு தரமான சம்பவம், வெற்றி தோல்வியை காட்டிலும் மனிதனின் சிறந்த குணமே முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்து ஹீரோவாக அறிமுகமான முதல் படம் அட்டக்கத்தி. அதனால் தான் அவர் பெயரே அட்டக்கத்தி தினேஷ் என்று மாறியது.
அட்டக்கத்தி படத்துக்கு பின்பு ஏராளமான படங்களில் அவர் நடித்து விட்டார். விசாரணை குக்கூ லப்பர் பந்து என பல படங்களில் அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். இதற்கிடையே பலரும் அறியாத ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது தினேஷ் அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே விஜய பிரபாகரன் என்ற இயக்குனர் தினேஷை அணுகி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்க முன்வந்துள்ளார். கதையும் சொல்லியிருக்கிறார். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அது நடக்கவில்லை. தயாரிப்பாளரும் கிடைக்கவில்லை.
அதனால் அந்த படமே உருவாகவில்லை. அதன்பிறகு விஜயபிரபாகரன் மும்பையில் போய் செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் மும்பையில் செட்டில் ஆன விஜயபிரபாகரனை தேடிப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்த நடிகர் அட்டக்கத்தி தினேஷ் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அந்த படத்தை அட்டக்கத்தி தினேஷே சொந்தமாகவும் தயாரிக்கிறார்.
தன்னை ஹீரோவாக்க முதன் முறையாக ஆசைப்பட்ட அந்த இயக்குனரின் அன்புக்காக, அவர் தன்னை வைத்து படமே இயக்காத நிலையிலும் அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து தனது சொந்த செலவில் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவும் வாய்ப்பளித்து அதில் ஹீரோவாகவும் நடிக்க முன்வந்துள்ள அட்டக்கத்தி தினேஷின் பெருந்தன்மையும் சிறந்த குணமும் தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடமாக உள்ளது.





