தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறியிருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் பாலாஜி சக்திவேலுவும் ஒருவர். ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் அவர் உதவி இயக்குனராக பணி செய்தவர். பிறகு நடிகர் பரத் சந்தியா நடித்த காதல் படத்தை இயக்கினார்.
இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சூப்பர் ஹிட் படமாக இருந்தது. அதேபோல் அவரது இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 கல்லூரி உள்ளிட்ட படங்களும் ரசிகர்களின் மனதில் வெகுவாக இடம் பிடித்தன. அடுத்து அவரது இயக்கத்தில் உருவான ரா ராஜ்குமார் என்ற படம் இதுவரை வெளிவரவில்லை.
இதற்கிடையே இயக்குனர் பாலாஜி சக்திவேல் முழு நேர நடிகராக மாறிவிட்டார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்த பாலாஜி சக்திவேல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். டிஎன்ஏ குடும்பஸ்தன் குட்நைட் பறந்து போ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் வரும் 5ம் தேதி நடிகர் கேபிஒய் பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார். அவருடன் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா ஜோடியாக நடித்திருக்கிறார். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக அவர் இதற்கு முன்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி கண்ணாடி படம் குறித்து பாலாஜி சக்திவேல் கூறியதாவது, நான் பல ஆண்டுகள் இயக்குனராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பு எடுப்பதை பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் மறுபுறம் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதை கற்றுக் கொண்டேன். அதாவது நடிக்க வைப்பதை விட நடிப்பது மிகவும் கடினமானது. நான் இணைந்த ஒவ்வொரு படமும் சிறந்த இயக்குனர்களின் படைப்பாக இருந்தது.
அதுபோலவே காந்தி கண்ணாடி படம் குறித்து இயக்குனர் விவரித்தவுடன் உடனே அந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். மிகவும் அழகான உணர்ச்சிமிகு சிறந்த கதை அது. படத்தை பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். கேபிஒய் பாலா நிச்சயமாக கன்டென்ட் டிரிவன் ஸ்டார் ஆகப் போகிறார். அர்ச்சனா அபாரமான திறமைசாலி. அவருடன் திரையை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்று நடிகர் பாலாஜி சக்திவேல் கூறியிருக்கிறார்.





