தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கஞ்சா கருப்பு. பிதாமகன் படத்தில் அறிமுகமான கஞ்சா கருப்பு தொடர்ந்து ராம் சுப்ரமணியபுரம் தாமிரபரணி சிவப்பதிகாரம் சண்டக்கோழி அழகிய தமிழ் மகன் அறை எண் 305ல் கடவுள் களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து பலத்த நஷ்டத்தை சந்தித்தார்.
சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாகி 100 எபிசோடுகள் ஓடிய ரிசார்ட் என்ற வெப் சீரிஸில் சிதம்பரம் என்ற கேரக்டரில் கஞ்சா கருப்பு சமையல்காரர் கேரக்டரில் நடித்திருந்தார். வேல்முருகன் போர்வெல் படம் தந்த நஷ்டம் காரணமாக அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தாலும் கூட படம் எடுக்க மாட்டேன் என்று கஞ்சா கருப்பு கூறியது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, விஜய் ஆட்சி குறித்து மனதில் என்ன நினைக்கிறேனோ புத்தியில் என்ன தோணுதோ அதை வெளிப்படையாக சொல்லிடுவேன். மக்களுக்கு நிறைய குறைபாடுகள் இருக்குது. அதை புரிஞ்சுக்கிட்டு செஞ்சா நல்லா இருக்கும்.
நானே ஒரு பிரச்னைக்காக தலைமை செயலகத்துக்கு போயிருந்தேன். அங்கே யாரும் அதை எடுத்துக்கலே. அதை நினைக்கும் போது எனக்கு வேதனை ஆயிடுச்சு. காரைக்குடி அமைச்சர் பிரபுவை போய் பார்த்தேன். என் தம்பி விபத்துல இறந்துட்டான். பஸ் ஸ்டாண்டுல பஸ் அடிச்சிட்டு போயிடுச்சு.
அதைப் பத்தி அவர்கிட்ட போய் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தேன். அவர் அதற்கு ஒரு ஆக்சனும் எடுக்கலே. சரி அப்படீன்னு சிஎம் பார்க்கலாம்ன்னு போனேன். என்னை பார்க்க விடலே. நீங்க சிஎம்மை பார்க்கணும்ன்னா 4 நாளுக்கு முன்னாலேயே பதிவு பண்ணனும்ன்னு சொல்லிட்டாங்க. அப்படி பதிஞ்சாலும் அவர் ஓகே சொல்லணும். அப்போ தான் அவரை பார்க்க முடியும்ன்னுட்டாங்க.
அப்புறம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கிட்ட அந்த மனுவை கொடுத்தேன். அந்த மனு அவரோட டேபிளுக்கு போச்சா, போகலையான்னு எனக்கு தெரியாது. இதுவரைக்கும் ஒரு தகவலும் வரலே. அதை நெனைச்சா தான் வேதனையா இருக்கு. இப்படி எல்லாத்தையும் சரி பண்ணினா நல்லா இருக்கும். இதை தான் சொல்ல விரும்பறேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





