தமிழ் சினிமாவில் பணத்துக்காக புகழுக்காக பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். சினிமாவில் கேமரா முன்பு நடிப்பது மட்டுமின்றி பொது வாழ்விலும் ரசிகர்கள் மத்தியிலும் நடிப்பதும் பலருக்கு வழக்கமாக இருக்கிறது. தங்களது இமேஜை தக்க வைத்துக்கொள்ள இதுபோல் இரட்டை வேடம் போடும் நடிகர்கள் பலருண்டு. உண்மையில் அவர்களது சுயரூபம் வேறாக தான் இருக்கும்.
ஆனால் தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி, காமெடி நடிப்பில் பல உச்சங்களை தொட்டவர். சினிமாவில் ஹீரோக்களையே கலாய்க்கும் வல்லமை வாய் திறமை கவுண்டமணிக்கு மட்டுமே சொந்தமானது. ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு அர்ஜூன் சரத்குமார் சத்யராஜ் என யாராக இருந்தாலும் சந்தடி சாக்கில் கலாய்த்து விடுவார் கவுண்டமணி. அதனால் ரஜினி கமல் கூட கவுண்டமணியுடன் நடிக்கும் போது கொஞ்சம் உஷாராக தான் இருப்பார்கள்.
நடிகர் கவுண்டமணியை பொருத்த வரை கேமரா முன்பு மட்டுமே நடிப்பார். நிஜத்தில் அவரது இயல்பு எப்படியோ அப்படியே நடந்துக்கொள்ளவார். டிவி பத்திரிகைகளுக்கு பேட்டி தர மாட்டார். கேட்டால், நான் நடிக்கிறேன், நீங்கள் படம் பார்க்கிறீர்கள். அதை தாண்டி நமக்குள் எந்த உறவும் இல்லாத போது, என்னை பற்றி பர்சனலாக ரசிகர்கள் தெரிந்துக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்பவர்.
நடிகர் கவுண்டமணிக்கு இப்போது 85 வயதாகிறது. இப்போதும் அவர் கதை பிடித்திருந்தால் சில படங்களில் நடிக்கவே செய்கிறார். கவுண்டமணி நடிப்பில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கவுண்டமணி பங்கேற்று பேசினார். கவுண்டமணியை நடிகராக அறிமுகம் செய்த இயக்குனர், நடிகர் கே பாக்யராஜ், பி வாசு, தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய கவுண்டமணி, ஒத்த ஓட்டு முத்தையா படத்தை எல்லோரும் பாருங்கள். நல்ல படம். கே பாக்யராஜ் பி. வாசு கே ராஜன் போன்றவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தில் என்னோடு நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த விழாவுக்கு வந்த ரசிகர்கள், வராத ரசிகர்கள் வீட்டில் இருக்கும் ரசிகர்கள் வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள் ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒத்த ஓட்டு முத்தை படத்தை பாருங்கள்,வெற்றி ஓட்டு முத்தையாவாக படத்தை மாற்றிக் காட்டுங்கள். திரும்ப திரும்ப சொல்கிறேன், திரும்பி பார்த்தும் சொல்கிறேன். மறக்காமல் ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்கள் என்று காமெடி பேசி அசத்தியிருக்கிறார் நடிகர் கவுண்டமணி. 85 வயதிலும் தன் படத்தின் பிரமோசனுக்காக விழாவில் பங்கேற்ற மூத்த கலைஞர் நடிகர் கவுண்டமணியை பார்த்த பிறகாவது நடிகர்கள் அஜீத்குமார், பிரபாஸ், நடிகை நயன்தாரா போன்றவர்கள் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்வார்களா, என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





