சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்புடன் திரையில் ஒடிக்கொண்டு இருக்கும் படம் லப்பர் பந்து. அறிமுக முயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஹரீஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ்குமார் இரட்டை நாயகர்களாக இந்த படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கதையும், திரைக்கதையும் படத்தின் கேரக்டர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனால் அந்த படம் பெரிய கவனத்தை பெற்று விடுகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, குட்நைட், சித்தா, வாழை பட வரிசையில் இப்போது லப்பர் பந்து படமும் இணைந்து விட்டது. படம் ரிலீஸான 6 நாட்களில் ரூ. 10 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
லப்பர் பந்து படத்தில் சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம், குடும்ப படமாகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. கிரிக்கெட்டில் அட்டகத்தி தினேஷுக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையில் நடக்கும் உணர்வு மோதல்களை கதைக்களமாக்கி படம் எடுக்கப்பட்டுள்ளது.
லப்பர் பந்து படத்தின் வெற்றி விழா, சென்னை வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் தமிழரசன் பச்சமுத்து, இசையமைப்பாளர் சான் ரோல்டன், நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், பால சரவணன், டி எஸ் கே, காளி வெங்கட், பாலசரவணன், நடிகைகள் சஞ்சனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது, இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றதற்கும் இயக்குனரின் எழுத்தை கொண்டாடியதற்கும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி. விஜயகாந்த் ஆசீர்வாதம் எங்களுக்கு மிகவும் உதவியது. அவரது குடும்பத்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
எனது அப்பா எதையும் தலைக்கு எடுத்துக் கொண்டு போகாதே, இதயத்தில் வைத்துக் கொள் என்பார். அதுபோல் இந்த நெகிழ்ச்சியான வெற்றியை என் இதயத்தில் வைத்துக் கொள்கிறேன். மக்கள் இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என நான் நினைக்கவில்லை. இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் எழுந்து, உங்களை விட படம் பார்த்த நான் இரண்டு மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். அதுதான் உண்மையான வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன். இயக்குனர் தமிழும் நானும் அண்ணன் தம்பி போல பழகி உள்ளோம் என்று அந்த விழாவில் நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியிருக்கிறார்.





