எம்ஜிஆர் கொடை குணம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். தன்னுடன் பல படங்களில் நடித்த நடிகர் அசோகனுடன் எம்.ஜி.ஆர் ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்தார். அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப்பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார்.
அவரை நன்கு சாப்பிட வைத்து அழகு பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் பரிமாறச் சொல்வார் எம்.ஜி.ஆர். நேற்று இன்று நாளை படம் அசோகன் தயாரித்த படம். தி.மு.கவில் இருந்து 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட போது சத்யா ஸ்டுடியோவில் நேற்று இன்று நாளை படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நேற்று இன்று நாளை படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர் தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால் அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.
அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர் அவரை வரச்சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி உள்ளது என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர், அவருக்குத் தந்து பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.
பணம் கிடைத்த அன்று இரவே ஒவ்வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக் காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார். எம்.ஜி.ஆரின் உதவியோடு நேற்று இன்று நாளை படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடி வசூலை குவித்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம், எல்லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப்பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர், அவரது நிலைமையை உணர்ந்து தனது சம்பள பாக்கியான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு அசோகன் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி முழுவதையும் எம்.ஜி.ஆர் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து எடுத்து கொடுத்து அவரது மனபாரத்தை தீர்த்திருக்கிறார். அந்த படத்துக்காக எம்ஜிஆர் சம்பளமே வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





