காமெடி நடிகராக இருந்து தமிழ் சினிமாவின் ஹீரோவாக இப்போது நடித்து வருபவர் நடிகர் சூரி. மாமன் படத்தை தொடர்ந்து அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். மகிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடலோர மக்களின் வாழ்க்கை மற்றும் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஸ்போர்ட்ஸ் ஆக்சன் படமாகும்.
இன்று மண்டாடி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில் மண்டாடி படம் குறித்து சினிமா விமர்சகர் மற்றும் மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, படம் தொடங்கும்போது சென்னையில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நீச்சல் குள வாட்ச்மேனாக சூரி அறிமுகமாகிறார்.
இராமநாதபுரத்தில் இருந்து அவரை தேடி ஒருவர் வரும்போது சூரியின் கதாபாத்திரத்துக்கு பின்னால் பெரிய சம்பவம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. ஆனால் கதை கடலோர கிராமத்தை நோக்கி நகர்ந்த பிறகு ஊரில் பெரிய படகுப் பந்தய வீரரான சூரி விளையாட்டே வேண்டாம் என சென்னைக்கு ஓடி வந்த பின்னணி வெளிப்படுகிறது.
மீண்டும் ஊருக்கு வந்து பயிற்சியாளராகி பின்னர் அவரே களத்தில் இறங்குகிறார். ஆனால் ஆரம்பப் பகுதியில் தேவையில்லாத பில்டப் மற்றும் நீண்ட உரையாடல்கள் மட்டுமே இருக்கிறது. தவிர கதாபாத்திரங்களின் பின்னணியும் அல்லது உரையாடல்களின் நோக்கமும் தெளிவாகவே இல்லை. ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்சன் படத்திற்கு உண்டான எந்த சுவாரசியமும் படத்தில் இல்லை.
இந்த படகு போட்டி மக்களுக்கு ஏன் முக்கியம்? இதன் மூலம் அவர்களுக்கு என்ன பயன்? இது பரம்பரை போட்டியா அல்லது வாழ்வாதார பிரச்சனையா? என எந்த ஒரு முக்கியமான காரணமும் படத்தில் விளக்கப்படவில்லை. பொதுவாக ஸ்போர்ட்ஸ் படங்களில் சலிப்பு தட்டாமல் இருக்க பல கிளைக் கதைகளை வைப்பார்கள். ஆனால் இயக்குனர் ஒரே நேர்கோட்டில் கதையை நகர்த்தி ரசிகர்களை சோதித்துள்ளார்.
மண்டாடி யார்? காளி யார்? மாரி யார் என்ற கேள்விகள் மட்டுமே மிஞ்சுகிறது. நடிகை சத்யராஜ் ஒரு முக்கியமான இடத்தில் அறிமுகமான பிறகாவது படம் அடுத்த கட்டத்திற்கு நகருமா என்றால் அதுவும் ஏமாற்றமே. மண்டாடி படத்தின் மீது பிரமோசன்கள் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு படம் எந்த அளவுக்கு பதில் அளித்துள்ளது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் காரசாரமாக கூறியிருக்கிறார்.





