லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. விஜய் இத்திரைப்படத்தில் ஒரு வெறித்தனமான கேங்கஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ, சாண்டி மாஸ்டர் உட்பட பலரும் நடித்து வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தை தனது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் கொண்டு வந்திருந்தார். இதில் “கைதி” திரைப்படமும் அடங்கியிருந்தது. இதனை தொடர்ந்து “லியோ” திரைப்படமும் LCUக்குள் வருமா? வராதா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறு மிக பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாகி வருவதாக தெரிய வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரான ஹரீஷ் உத்தமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஸ்டோரியாக வைத்துள்ளார். அதில், ஹரிஸ் உத்தமன், “லியோ நீங்க டேஞ்சர்ல இருக்குறீங்க” என கூற, அதற்கு விஜய், “நான் டேஞ்சர்ல இல்ல, நானே டேஞ்சர்தான்” என கூறுவது போல் அப்புகைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் உருவாக்கி இருப்பதாக தெரியவருகிறது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.






