தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஒரு வாரம் ஆன நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்பி தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கமல்ஹாசன் சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார்.
தமிழக முதல்வர் விஜயை பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறிவரும் நிலையில் மூத்த நடிகரான கமல்ஹாசனும் மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தம்பி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளை சந்தித்து வரும் தமிழ் திரைப்படத்துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆறு முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன் நன்மை மலரட்டும் என்று கமல்ஹாசன் அந்த பதிவில் கூறிக் பெற்றுள்ளார். மேலும் திரைத்துறை சார்பில் தமிழக முதல்வரிடம் நடிகர் கமல்ஹாசன் வைத்த ஆறு கோரிக்கைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழக அரசு சார்பில் ஒடிடி தளம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி கேளிக்கை வரியான 4 சதவீதத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பைரசிக்கு எதிராக வலுவான குழு அமைக்க வேண்டும். ஒரு நாளைக்கு தினமும் தியேட்டரில் 5 காட்சிகள் படங்கள் திரையிட அனுமதி வழங்க வேண்டும். எல்லா திரைப்படங்களும் தியேட்டரில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் 50 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட்டால் 10 சதவீதம் வரை தயாரிப்புக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என ஆறு முக்கிய கோரிக்கைகளை நடிகர் கமல்ஹாசன் தமிழக முதல்வர் விஜயிடம் வழங்கியிருக்கிறார். இந்த கோரிக்கைகள் அனைத்துமே தமிழ் சினிமா இன்றைய சூழலில் சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்னைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





