உலகளவில் சினிமா என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. இதில் மக்களின் நேரத்தை போக்குவதற்கான விஷயங்கள் மட்டுமின்றி மக்களை ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் செயல்பட வைக்கவும் படைப்பாளிகள் முயற்சித்து வருகின்றனர். ஒரு நல்ல திரைப்படம், மனிதனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில், ஹீரோயிசம் காட்டும் படங்களே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஹீரோவை கொம்பாதி கொம்பனாக காட்டும் படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் அதிகரித்து விட்டன. இதில் குட்நைட் சித்தா லப்பர் பந்து பார்க்கிங் போன்ற படங்களும் அவ்வப்போது வெளியாகி தமிழ் சினிமாவை காப்பாற்றுகின்றன.
இந்த சூழலில் சென்னையில் வருகிற 21ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் பிக்கி மாநாடு நடைபெற உள்ளது. சினிமா உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்கு துறையின் அம்சமாக இந்த மாநாடு சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேச இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 70 வயதிலும் நாயகனாக நடித்து வருபவர். சினிமா பயணத்தில் நிறைய அனுபவங்களை சந்தித்தவர். மேலும் சினிமாவில் சகல தொழில்நுட்பங்களையும் பெற்றவர்.
இதுகுறித்து பிக்கி மாநாட்டு குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் பொழுதுபோக்கு துறை கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் பிராந்திய மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு சென்னையில் இந்த பிக்கி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் தொலைக்காட்சி ஓடிடி கேமிங் அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஒரு முக்கிய மேடையாக இந்த நிகழ்ச்சி அமைகிறது. இந்த துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தூண்டுகோலாக இது திகழும். இந்த 2 நாள் மாநாட்டில் பொழுதுபோக்கு துறையில் பல்வேறு பிரிவுகள் குறித்த அமர்வுகள் கலந்துரையாடல்கள் பட்டறைகள் சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





