தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ரஜினிகாந்த் தனது 172வது படத்தில் ஜெயிலர் 2 நடித்து வருகிறார். கமல்ஹாசன் அடுத்து தனது 237வது படத்தில் அன்பறிவ் மாஸ்டர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இருவருமே ஒரு படத்தில் நடிக்க ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என சிறுவனாகவே அவர்களுடன் நடித்தவர். ஆனால் ரஜினிகாந்த் தனது 24வது வயதில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம்தான் ரஜினியின் அறிமுக படம்.
ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்பத்தில் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ஆனால் அப்போதே கமல்ஹாசன் தமிழில் முன்னணி நடிகராக இருந்தார். மூன்று முடிச்சு என்ற படத்தில் நடிக்க கமல்ஹாசன் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கிய நிலையில் ரஜினியின் சம்பளம் ரூ. 2 ஆயிரம்தான். என்னுடைய சம்பளம் ரூ. 5 ஆயிரம் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
ரஜினியும் கமலும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்தது. ஆனால் ரஜினி கமல் சம்பளம் உயரவில்லை. அதனால் இனி இருவரும் தனித்தனியாக நடித்தால்தான் அதிக சம்பளம் பெற முடியும், புகழ் அடைய முடியும் என ரஜினி கமல் இருவருமே முடிவு செய்துதான் தனித்தனி பாதைகளில் தங்களது சினிமா பயணத்தை தொடர்ந்து இன்று இரண்டு சிகரங்களாக உயர்ந்து நிற்கின்றனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, 16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை. அவர் சினிமாவுக்கு வந்த புதுசு. ஷெட்ல அவர் பாட்டுக்கு தனியா இருப்பார். யாரும் அவரை கண்டுக்க மாட்டாங்க. தனியா ஒரு மரத்தடியில் போய் சாப்பிடுவார். நான் கூப்பிட்டாலும் வர மாட்டார்.
அவரோட சீன் எடுக்கும் போது அவருக்கு காலையிலேயே மேக்கப் போட்டு ஓரமா ஒரு நாள் பூரா உட்கார சொல்லி கடைசியில் தான் அவரை வைத்து காட்சி எடுப்பாங்க. அப்போ நான் சொன்னேன். யோவ்… நீங்க வேணா பாருங்க. ஒரு நாள் இந்த தமிழ் சினிமாவில் மொத்த பேரும் அந்த ஆளுகிட்ட கால்சீட் கேட்டு அலைய போறீங்க என்று சொன்னேன். அது நாளடைவில் உண்மையானது என்று நடிகர் கமல்ஹாசன் பெருமிதமாக கூறியிருக்கிறார்.





