நீட் தேர்வுக்கு எதிராகவும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்தும் டெல்லியில் நடந்து வரும் மாணவர் போராட்டம் கடந்த சில தினங்களாக உச்சத்தை எட்டியுள்ளது. சிஜேபி கட்சி மாணவர்களும் இந்த போராட்ட களத்தில் குதித்த நிலையில் நாடு முழுவதும் பதட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த போராட்டம் சூடுபிடித்துள்ளது.
காலா கபாலி போன்ற ரஜினி நடித்த படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நீலம் மாணவர் அமைப்பு சார்பில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான கண்டன கூட்டத்தில் இயக்குனர் பா ரஞ்சித் பேசியதாவது, தவெக ஆட்சியில் அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் உள்ளனர் என்று பெருமையாக பேசுகின்றனர்.
அந்த எட்டு பேரில் வன்னி அரசு ஒருவரை தவிர மற்ற யாருமே தலித் மக்களின் உரிமைகள் குறித்தோ பிரச்சினை குறித்தோ இதுவரை எதுவுமே பேசவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் அவர்கள் தரப்பில் தலித் மக்களுக்கான எந்த ஒரு ஒத்துழைப்பும் இல்லை. இப்படி தலித் அமைச்சர்கள் இருப்பதால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
குறிப்பாக அமைச்சர் ராஜ்மோகன் தலித் என்கின்றனர். அவர் தலித்தா, தலித் இல்லையா என்பது தெரியாது. அவர் போட்டியிடும் தொகுதி அறிவித்த போதுதான் தெரிந்தது. அதுவரை அவரை யூடியூபராக மட்டுமே எங்களுக்கு தெரியும். அவர் இதுவரை தலித் மக்களுக்காக என்ன குரல் கொடுத்திருக்கிறார்? தலித் உரிமைகள் குறித்து என்ன அவர் பேசியிருக்கிறார் என்று இயக்குனர் பா ரஞ்சித் கடுமையாக பேசியிருந்தார்.
இதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பி உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான கண்டன எதிர்ப்பு கூட்டத்தில் தவெக ஆட்சி குறித்தும் குறிப்பாக தலித் அமைச்சர்கள் குறித்தும் இயக்குனர் பா ரஞ்சித் பேச வேண்டிய அவசியம் என்ன? மாணவர்களின் பிரச்சனை குறித்து பேச வேண்டிய அவர் இப்படி தவெக ஆட்சியில் உள்ள தலித் அமைச்சர்கள் குறித்து விமர்சித்து பேசியது சரிதானா?
உண்மையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சமுதாயம் நியாயமாக போராடி வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் ஆதரவு தருவதாக கூறிக்கொண்டு இதை உண்மையில் திசை திருப்ப பார்க்கின்றனர். மாணவர்கள் பிரச்னையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றனர் என்று நெட்டிசன்கள் மத்தியில் இயக்குனர் பா ரஞ்சித்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.





