நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நடித்தாலும் உலக நாயகன் என கொண்டாடப்படுகிறார். ஒரு நடிகராக, திரைப்பட கலைஞனாக அவர் அடைந்துள்ள உயரங்களை, வேறு எவராலும் அண்ணாந்து கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஒரு சர்வலட்சணங்களும் பொருந்திய ஒரு ஆளுமையாக அவரது திறமை, ஆற்றல் பல படங்களில் வெளிப்பட்டு இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 1990களில் வெளியான படம் குணா. மனநலம் தவறிய குணா என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அவர் அபிராமி, அபிராமி என மனதில் உருகி உருகி காதலிக்கும் ஒரு பெண்ணை, நேரில் பார்க்கும்போது கடத்திக்கொண்டு போய் விடுவார்.
கொடைக்கானல் மலைமேல் இருக்கும் ஒரு சர்ச்சிலும், அதன்பிறகு ஒரு குகையிலும் அந்த காதலியோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார். கால் முறிந்து போன தன் காதலிக்காக, கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என பாட்டு பாடி தூங்க வைப்பார். இறுதியில் போலீசார், தன் காதலியை சுட்டுவிட, காதலியை உடலோடு குதித்து குணாவும் இறந்து போவார்.
கமல்ஹாசன் நடித்த வித்யாசமான படங்களில் மிகவும் பேசப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கமல்ஹாசனின் கலை தாகத்தை புரிந்துக்கொண்ட அவரது ரசிகர்களால் மட்டுமே இந்த படம் கொண்டாடப்பட்டது. மற்றவர்கள் எல்லாம், இந்த படத்தை வெகுவாக ரசிக்கவில்லை.
இப்போது மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயரில் வெளியான மலையாள படம் ஒன்றில், குணா படம் எடுத்த அதே குகையில் நண்பர் ஒருவர் காணாமல் போக, அவரை கண்டுபிடித்து மீட்பதுதான் கதை. இந்த படம் வெற்றி பெற்று குணா படத்தில் இடம்பெற்ற குகை என குணா படத்துக்கு, கமலுக்கு பெருமை கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் பாராட்டிய கமல், குணா படத்தில் இடம்பெற்ற குகை குறித்தும் பேசியுள்ளார். கொடைக்கானல் மலையில் மனித நடமாட்டமே இல்லாத இடமாக வேண்டும் என்று 7 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றோம். மீண்டும் ஒரு கிலோ மீட்டர் சென்று பார்க்கலாம் என்று நடந்த போதுதான், இந்த குகை இருப்பது தெரிய வந்தது. அங்கு ஒரு சர்ச் செட் போட்டும், குகைக்குள் சென்றும் குணா படக்காட்சிகளை படமாக்கினோம், என்று கூறியிருக்கிறார் கமல்.





