லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ரசிகர்கள் இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படத்தின் கதை வேறொரு இயக்குனரின் கதை என்று வலைப்பேச்சு புகழ் சக்தி ஒரு பகீர் தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கார்த்திக் தங்கவேல் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அடங்க மறு”. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

“அடங்க மறு” திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் தங்கவேல் அதனை தொடர்ந்து நான்கு வருடங்களில் நான்கு வெவ்வேறு ஸ்கிரிப்ட்டுகளை முடித்திருந்தாராம். அந்த சமயத்தில் விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம் வெளிவந்திருந்தது. அதனை பார்த்த கார்த்திக் தங்கவேல் “இந்த படம் நாம் எழுதிய நான்கு கதைகளில் ஒரு கதையை போல் இருக்கிறதே” என நினைத்தாராம். எனினும் அவர் அது குறித்து புகார் தெரிவிக்காமல், இது தற்செயலான ஒன்று என நினைத்துக்கொண்டாராம். இவ்வாறு ஒரு தகவலை வலைப்பேச்சு சக்தி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “லியோ” திரைப்படமும் மாபெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





